தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவுத் திட்டம் கனடாவில் அமல்படுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்திலும் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு கூறி உள்ளதாவது:
’’தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் சிறப்புகளைக் கேட்ட தெலுங்கானா மாநில அதிகாரிகள் சென்னை வந்து அதன் செயலாக்க முறைகளைப் பார்வையிட்டுப் பாராட்டியதுடன் இத்திட்டத்தை அவர்கள் தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்தினர். இந்தியாவில் வேறு பல மாநிலங்களும் இத்திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்துகின்றன. இந்தியா கடந்து இத்திட்டம் கனடா அரசினால் பாராட்டப்பட்டு, அங்கும் செயல்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டிலும் காலை உணவுத் திட்டம்
இங்கிலாந்து நாடும் அடுத்த மாதம் தொடங்கித் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தைச் செயல்படுத்திட முனைந்துள்ளது. இத்திட்டம் மட்டுமல்லாமல், முதலமைச்சரின், மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் நாட்டின் பல மாநிலங்கள் புதுச்சேரி, கர்நாடகா , உத்தரகாண்ட் முதலிய பல மாநிலங்கள் ஏற்றுப் பின்பற்ற முனைந்துள்ளன.
அண்மையில், டெல்லி மாநிலத் தேர்தலின்போது பா.ஐ.க. கட்சி டெல்லியில் தம் ஆட்சி அமைந்ததும் மகளிர்க்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தது.
ஐக்கிய நாடுகள் அவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்
அமெரிக்க நாட்டு நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை, தமிழ்நாடு முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டியது.
இப்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் சிந்தையில் பூத்த செம்மலர்த் திட்டங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அவனி எங்கும் மணம் பரப்பி முதல்வருக்குப் புகழ் குவிக்கின்றன’’.
இவ்வாறு தமிழ்நாடு அரசு புகழாரம் சூட்டியுள்ளது.