Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
தவெக தலைவர் விஜய், 2026 தேர்தல் குறித்து ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பது, தற்போது அவரது தளபதிகளில் ஒருவராக திகழும் பிரஷாந்த் கிஷோர் மூலம் தெரியவந்துள்ளது.

சிங்கம் சிங்கிளாதான் வருது என்பதுபோல், 2026 தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கிய தகவலை, பிரஷாந்த் கிஷோர் வெளியிட்டுள்ளார். அது என்ன முக்கிய தகவல்.? தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தவெக கூட்டணி பேச்சு குறித்து வலம் வந்த செய்திகள்
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், ஆரம்பத்திலேயே, தான் தனியாக தேர்தலை சந்திக்கப் போவதில்லை என்பதை, தவெகவின் முதல் மாநாட்டில் பேசியபோது சூசகமாக தெரிவித்தார். அது எப்படி என்றால், கூட்டணியில் உள்ளவர்களுக்கும் ஆட்சியில் பங்கு என்ற கூறியதுதான். அதனால், அப்போதிலிருந்தே கூட்டணிப் பேச்சுகள் குறித்த செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டன.
அதில் முக்கியமாக, அதிமுகவும், தவெகவும் கூட்டணி சேர்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்றும், தவெகவிற்கு 60 சீட்டுகளும், துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாகவும் அதிமுக தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், விஜய் தரப்பும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால், கூட்டணி பேச்சுகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதோடு, வேறு சில கட்சிகளும் தவெக உடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்பட்டது.
2026 தேர்தல் - விஜய் முடிவு குறித்து சொன்ன பிரஷாந்த் கிஷோர்
தேர்தல் கூட்டணி குறித்த தகவல்கள் ஒருபக்கம் வலம் வந்தாலும், மறுபக்கம் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கிய விஜய், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை கட்சியில் இணைத்தார். அதோடு, மற்றொரு முக்கிய நகர்வாக, பிரஷாந்த் கிஷோரை வரவழைத்து, அவருடன் இணைந்து செயல்படுவதுதான். சமீபத்தில் நடந்த தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரஷாந்த் கிஷோர், தவெகவிற்கு தேர்தல் வியூகம் அமைக்க தான் வரவில்லை என்றும், விஜய் தமிழகத்தின் ஒரு புதிய நம்பிக்கை என்பதால் அவருடன் இணைந்திருப்பதாகவும் கூறி, பேசுபொருளாக மாறினார்.
தற்போது, தவெகவில் ஒரு தவிர்க்க முடியாத முக்கிய பிரமுகராக பிரஷாந்த் கிஷோர் மாறிவிட்ட நிலையில், அவர் கூறும் தகவல்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே பல தேர்தல்களின் முடிவை மாற்றிய அவர், தவெக உடன் இணைந்து பயணிப்பது, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரஷாந்த் கிஷோர், 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனித்தே போட்டியிடும் என உறுதியாக கூறியுள்ளார். தவெக உடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்பினாலும், விஜய் தனித்து போட்டியிடுவதையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவு மாற வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தனித்து போட்டியிடும் தவெக, பெரும்பான்மையுடன் தேர்தலில் வெல்லும் எனவும் அவர் அடித்துக் கூறியுள்ளார்.
கூட்டணி பேச்சுக்கள் உண்மையில் நடைபெறுகிறதா இல்லையா என்று அனைவரும் குழம்பி இருந்த நிலையில், பிரஷாந்த் கிஷோரின் இந்த அறிவிப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூட்டணி வைக்காத பட்சத்தில், சிதறும் ஓட்டுக்களை கட்சிகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன என் கேள்வி எழுந்துள்ளது. மேலும், இது திமுகவிற்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதனால், விஜய்யின் முடிவு மாறுகிறதா, இல்லையா என்பது, தேர்தல் இன்னும் நெருங்கிவரும் சமயத்தில்தான் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.