முறைகேடு செய்து பல கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணியில் இருக்கும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள 50% பொறியியல் கல்லூரிகளில் முழு நேரப் பேராசிரியர்கள் நியமனத்தில் மோசடி நடைபெற்று இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் வரை ஒரே பேராசிரியர் பணிபுரியும் அதிர்ச்சித் தகவலும், 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் வேலை செய்யும் அவல விவரமும் ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது.


உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்


இதுகுறித்துத் தகவல் அளித்த அறப்போர் இயக்கம் அமைப்பு, மோசடியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் மீது தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.


இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில் முறைகேடாகப் பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


’’முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீதும், கல்வி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளில் முறைகேடாகப் பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான். பொறியியல் கல்லூரிகளில் 52,500 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் 50,600 பேர் பணியாற்றுகின்றனர். மீதம் உள்ள 900 இடங்களில் 189 ஆசிரியர்கள் முறைகேடாகப் பணியாற்றுகின்றனர். இவர்கள் பல கல்லூரிகளில் முறைகேடாகப் பதிவு செய்து பணி செய்கின்றனர்.


ஆதார் எண்களில் மாற்றம் செய்து மோசடி


சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் ஆதார் எண்களில் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண்களில் மாற்றம் செய்து ஒரே நபர் 32 கல்லூரிகளில் சேர்ந்தது கண்டறியப்பட்டு உள்ளது.


இவ்வாறு முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை கண்டறிய நேற்றே குழு அமைக்கப்பட்டு விட்டது’’.  


இவ்வாறு துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.


குழுவில் ஏஐசிடிஇ சார்பில் ஒரு நபர், அரசு சார்பில் ஒருவர், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் என 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குழுவின் அறிக்கைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் வாசிக்கலாம்: ஒரே நேரத்தில் 11 பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்; 353 பேர் பல கல்லூரிகளில் வேலை செய்யும் அவலம்!