என்.எம்.எம்.எஸ். எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ தொகை திட்டத்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ கூறும்போது, ’’2022- 2023ஆம்‌ கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின்‌ அங்கீகாரம்‌ பெற்ற அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ எட்டாம்‌ வகுப்பு மாணவர்கள்‌ தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ திட்டத்‌ தேர்விற்கு 26.12.2022 முதல்‌ 20.01.2023 விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.


இந்த நிலையில்‌ தற்சமயம்‌ இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம்‌ 03.02.2023 முதல்‌ 07.02.2023 வரை நீட்டிக்கப்படுகிறது’’ என அறிவிக்கப்பட்டுள்ளது.


பதிவேற்ற விதிகள் என்ன?


கடந்த ஆண்டைப்‌ போலவே இந்த வருடமும்‌ எமிஸ்‌ அடிப்படையில்‌ மாணவர்களின்‌ பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான பதிவு எண், பாஸ்வேர்டைப் பயன்படுத்தி மாணவர்களின்‌ எமிஸ் எண்ணினை பதிவு செய்தவுடன்‌ விவரங்கள்‌ உடனடியாக திரையில்‌ தோன்றும்‌. அவ்விவரங்களில்‌ ஏதேனும்‌ திருத்தங்கள்‌ இருப்பின்‌, திருத்தங்களை மேற்கொள்ளவும்‌, விடுபட்டுள்ள விவரங்களையும்‌, புகைப்படத்தையும்‌ பதிவேற்றம்‌ செய்தால்‌
போதுமானதாகும்‌. 


NMMS தேர்வுக்கு மாணவர்கள்‌ சமர்ப்பித்த விண்ணப்பத்தின்‌ அடிப்படையில்‌ ( மாணவரின்‌ பெயர்‌ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழில்‌ எவ்வாறு இடம்‌ பெற வேண்டுமோ அதன்படி) EMIS இணையதளத்தில்‌ திருத்தங்களை மேற்கொண்டு அதன்‌ பின்னர்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


* மாணவர்‌ பெயா்‌, தந்‌தை / பாதுகாவலர்‌ பெயர்‌, பிறந்த தேதி, பாலினம்‌, கைபேசி எண்‌ போன்ற விவரங்கள்‌ EMIS இணையதளத்தில்‌ உள்ள விவரங்களுடன்‌ ஒத்திருக்கவேண்டும்‌.


ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றக்கூடாது


*  மாணவரின்‌ பெற்றோர்‌ பயன்படுத்தும்‌ நடைமுறையில்‌ உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும்‌. உதவித்‌ தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கே அனுப்பப்படும்‌ என்பதால்‌, அதே கைபேசி எண்ணை குறைந்தது தொடரும்‌ ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல்‌ இருக்கவேண்டும்‌.


* தேர்வர்கள்‌ விண்ணப்பத்தில்‌ பூர்த்தி செய்துள்ள விவரங்கள்‌ சரிதானா என்பதனைப்‌ பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.


* மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.


* பள்ளி முகவரி என்ற இடத்தில்‌ பள்ளியின்‌ பெயா்‌, முகவரியினை அஞ்சல்‌ குறியீட்டுடன்‌ பதிவு செய்யப்படவேண்டும்‌.


வீட்டு முகவரி மட்டுமே


* வீட்டு முகவரி என்ற இடத்தில்‌ பள்ளியின்‌ பெயர்‌ மற்றும்‌ முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின்‌ வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்‌.


* பெற்றோரின்‌ தொலைபேசி/ கைபேசி என்ற இடத்திலும்‌ பெற்றோர்‌ அல்லது பாதுகாவலரின்‌ தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிவிட வேண்டும்‌. பள்ளியின்‌ தொலைபேசி என்ற இடத்தில்‌ மட்டும்‌ பள்ளியின்‌ தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும்‌.


* பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில்‌ பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்‌.


* பதிவேற்றம்‌ செய்த விவரங்களில்‌ மாற்றம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌ தேர்வுக்‌ கட்டணத்தினை ஆன்லைனில்‌ செலுத்துவற்குள்‌ சரிசெய்து கொள்ள வேண்டும்‌. தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்திய பின்‌ எந்த பதிவுகளும்‌ கண்டிப்பாக மாற்ற இயலாது.


* மேற்படி தேர்விற்கான தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.50/- வீதம்‌ DGE PORTAL-ல் Online-ல் அனைத்து விண்ணப்பங்களும்‌ பதிவேற்றம்‌ செய்த பிறகு தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்‌. 


* தற்சமயம்‌ இத்தேர்விற்கு விண்ணப்பிக்க, கால அவகாசம்‌ 03.02.2023 முதல்‌ 07.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.