அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில் நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சிறப்புப் பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின்‌ கலைத்‌ திறன்களை வெளிக்கொணரும்‌ விதமாக, அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


கலைத் திருவிழா போட்டிகள்


கலை சார்ந்த பயிற்சிகள்‌ கலை அரங்க செயல்பாடுகள் மூலம்‌ வழங்கப்பட்டு, 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்‌ சான்றிதழ்களும்‌ வழங்கப்படுகின்றனன. மாநில அளவில்‌ கலையரசன்‌, கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால்‌ விருதுகளும்‌ சான்நிதழ்களும்‌ வழங்கப்படுகின்றன.


குறிப்பாக அரசுப் பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ தனித்தனியே கலைத்திருவிழா போட்டிகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்புப் பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநர் கூறி உள்ளதாவது:


’’2024 -25 ஆம்‌ ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ நடத்துவது சார்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.


செப்.27 வரை அவகாசம்


இந்த நிலையில்‌ பள்ளி அளவில்‌ போட்டிகள்‌ நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு சார்ந்து மாவட்டங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகள்‌ வரப் பெற்றதைத்‌ தொடர்ந்து, பள்ளி அளவிலான போட்டிகளில்‌ வெற்றியாளர்களின்‌ விவரங்களை எமிஸ் தளத்தில்‌ உள்ளீடு செய்வதற்கு 27.09.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.


இப்போட்டிகளில்‌ அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌ (சிறப்புப்‌ பள்ளிகள்‌ உட்பட) அனைத்து மாணவ, மாணவியருக்கும்‌ வாய்ப்பளித்தல்‌ வேண்டும்‌. இந்த விவரத்தினை அனைத்துப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கும்‌ (சிறப்புப்‌ பள்ளிகள்‌ உட்பட) தெரிவித்து மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்‌’’.


இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.