தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
திராவிட அரசியலை கையில் எடுக்கிறாரா விஜய்?
வாழ்ந்த காலம் கடந்தும் தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றை பெயர்தான் பெரியார். சமத்துவம், சமூகநீதி போன்ற மனிதகுலத்தின் மிக அத்தியாவசியமான கொள்கைகளுக்காக, குரல் கொடுத்து முக்கிய சீர்திருத்தங்களுக்கான காரணமாக திகழ்கிறார்.
தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற பெரியாரின் 146ஆவது பிறந்த நாளான இன்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரை பலரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.
அந்த வகையில், சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். இன்று காலை, விஜய் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்;
மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்: சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை, அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார்.
அரசியல் பேசிய விஜய்:
விஜயின் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இதற்கிடையே, தவெகாவின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை, சித்தாந்தம் ஆகியவற்றை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்பாகவே, அண்ணாவின் பிறந்தநாளுக்கும் பெரியாரின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்து, பெரியார் திடலுக்கு நேரடியாக சென்று மரியாதை செலுத்தியதன் மூலம் தான் எந்த விதமான அரசியல் பேசப்போகிறார் என்பதை விஜய் தெளிவுப்படுத்தியுள்ளார்.