நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறும் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 


 


12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் நீட் விலக்குகோரும் சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகம் செய்தார். திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.  


சட்டமசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பேசிய மு.க ஸ்டாலின், "  12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தலைவர் கருணாநிதி கொண்டு வந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கூட நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறவில்லை. ஆனால், தற்போது, எதிர்க்கட்சியாக தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நீட் தேர்வு முதன் முதலில் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது.


உங்கள் தளமையிலான ஆட்சிக் காலத்தின் போதுதான், நீட் தேர்வின் அச்சம் காரணமாக அனிதா உட்பட மாணவ/மாணவிகள்  தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத்  தலைவர் நிராகரித்ததை இந்த சபைக்கு தெரியப்படுத்தாமல் இருந்தது நீங்கள் தான். நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார். உங்கள் ஆட்சிக் காலத்தின் போது தான், இருமுறை தேர்ச்சிப் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிடைக்காமல் போனது. 


ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும், இருந்து வருகிறீர்கள். சிஏஏ சட்டம், வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு நிபந்தணை விதித்திருக்கலாம். அந்த தெம்பு, திராணி உங்களிடம் இல்லை. அதை, செய்திருந்தால், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்திருக்கும். 


அதயெல்லாம் விடுத்து, நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் மடிந்த போது, மரண அமைதி காத்து ஆட்சியை நடத்தியவர்கள் தான் அதிமுக" என்று தெரிவித்தார்.                    


மேலும், கூறுகையில், " திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறோம். அதன் படி, 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் வகையில் நீட் விலக்குகோரும் சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகம் செய்ய இருக்கிறேன்" என்று தெரிவித்தார். 




இந்த, மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-




  • நீட்தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன்  குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகிறது

  • கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது

  • கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது

  • நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது

  • சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது. 

  • சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மாணவர்களின் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம்  ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.