நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெற வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்படவுள்ளது.


இந்த, மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-


• நீட்தேர்வு ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன்  குழுவினர்  அறிக்கையிலிருந்து தெளிவாகிறது


•  கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது


• கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது


• நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது 


• சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது


• சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மாணவர்களின் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம்  ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. 




நீட் மரணங்கள்:  


முன்னதாக, நீட் தேர்வு அச்சம் காரணமாக சேலம் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவிற்கு கிராமப்புற- நகர்ப்புறஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களை புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ – மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.


நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள், லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட் பல்வேறு மோசடிகளும், மாணவ மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும், மேலும் வலுவடைய வைக்கிறது.


 
இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்த விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்திய துணைக்கண்டத்தில் பிரச்னையாக கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.


மாணவச்செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்து தரும் பெரும் பொறுப்பும், கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும். எனவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறப்பட்டது.   


திமுக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்: 


நீட் தேர்வு  விவகாரத்தை திமுக அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக அஇஅதிமுகவும், பிஜேபியும் குற்றம் சாட்டியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "அச்சம்விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?  ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே, அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.