10ஆம் வகுப்பில் தமிழ் மொழி அல்லாத, சிறுபான்மை மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், 2023- 2024ஆம் ஆண்டிற்கு மட்டும் தமிழ் மொழிப் பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு தமிழ்‌ கற்றல்‌ சட்டம்‌ 2006, பிரிவு (3)-இன்படி 2006- 2007-ஆம்‌ கல்வி ஆண்டிலிருந்து அனைத்துப்‌ பள்ளிகளிலும்‌ படிப்படியாக ஒன்று முதல்‌ பத்தாம்‌ வகுப்பு வரை தமிழ்‌ கற்பிக்கப்பட வேண்டும்‌. இச்சட்டப்‌ பிரிவின்‌ அடிப்படையில்‌ 2006-ஆம்‌ ஆண்டு பத்தாம்‌ வகுப்பு அரசு பொதுத்‌ தேர்வெழுதும்‌ மாணவர்கள்‌ தமிழ்‌ மொழிப்பாடத் தேர்வு எழுத வேண்டும்‌ என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத மாணவர்களுக்கு அவர்களுக்கு தாய்மொழியை விருப்பப் பாடமாகத் தேர்வெழுத நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர்கள் பெறும் மதிப்பெண்களை, 10ஆம்வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடவும் தேர்ச்சிக்கு மதிப்பெண்களை கருத்தில்கொள்ள வேண்டாம்‌ என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


3 ஆண்டுகளுக்கு மட்டும் விலக்கு


உயர் நீதிமன்ற தீர்ப்பாணையில்‌ மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில்‌ படிக்கும்‌ மாணவர்களுக்கு. 2020 முதல் 2022 வரையான மூன்றாண்டுகளுக்கு மட்‌ டும்‌, 10 ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தமிழ்‌ மொழித்‌ தாள்‌ எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து தீர்ப்பளித்துள்ளது


இந்திய உச்ச நீதிமன்ற இடைக்காலத்‌ தீர்ப்பாணையில்‌ மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில்‌ படிக்கும்‌ மாணவர்களுக்கு 2020 முதல்‌ 2022 கல்வியாண்டு வரையிலான காலத்திற்கு 10-ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தமிழ்‌ மொழித்‌ தாள்‌ எழுதுவதிலிருந்து விலக்களிக்கலாம்‌ என்பது 2023-ஆம்‌ ஆண்டுற்கும்‌ கூட பொருந்தும்‌ என தீர்ப்பளித்துள்ளது.


தமிழக மொழி சிறுபான்மை பேரவையினர்‌, மொழி சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில்‌ தமிழ்‌ மொழிப்பாட ஆசிரியர்கள்‌ நிரப்பப்படாமல்‌ உள்ளதாகத் தெரிவித்து எதிர்வரும்‌ ஏப்ரல்‌ மாதத்தில்‌ பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு நடைபெறுவதற்கு இரு மாத கால அளவே உள்ள நிலையில்‌. இந்த ஆண்டிற்கு கட்டாயத்‌ தமிழ்‌ பாடத்திற்குப்‌ பதிலாக தங்களது தாய்‌ மொழியில்‌ தேர்வெழுத அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்‌. மேலும்‌ மொழி சிறுபான்மையினர்‌ பள்ளிகளில்‌ உள்ள அனைத்து தமிழாசிரியர்‌ பணியிடங்களும்‌ நிரப்பப்படும்‌ நிலையில்‌ சிறுபான்மை மொழி பயிலும்‌ மாணவர்களுக்கு 2025-ல்‌ நடைபெறவுள்ள 10-ஆம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வில்‌ தமிழ்‌ மொழி பாடம்‌ தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரி முறையீடு செய்யப்படமாட்டாது எனவும்‌ உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.


காலிப்‌ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை


தமிழ்நாடு தமிழ்‌ கற்றல்‌ சட்டத்தின்படி, தமிழ்‌ பாடம்‌ கற்பிக்க ஆசிரியர்‌ நியமித்தல்‌ / காலிப்‌ பணியிடங்களுக்கு மாற்றுப்‌ பணியில்‌ ஆசிரியர்களை நியமித்தல்‌ உள்ளிட்ட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அரசுப்‌ பள்ளிகளில்‌ உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ காலிப்‌ பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ அறிவிக்கை வெளியிடப்பட்டு தொடர்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன‌. இந்நிலையில்‌, தமிழக மொழி சிறுபான்மை பேரவையிவரின்‌ கோரிக்கையின்‌ அடிப்படையில்‌ 2023-2024-ஆம்‌ கல்வியாண்டில்‌ தமிழ்‌ மொழி அல்லாத சிறுபான்மை மாணவர்கள் கட்டாய தமிழ்‌ மொழிப்‌ பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து, அவர்களது சிறுபான்மை தாய்மொழிப்‌ பாடத்தில் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


2024-2025-ஆம்‌ கல்வியாண்டில்‌ சிறுபான்மை மொழி பள்ளிகளில்‌ உள்ள அனைத்து தமிழாசிரியர்‌ பணியிடங்களையும்‌ நிரப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.