தமிழ் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது பிரேமலு படம் .


பிரேமலு


கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி மலையாளத்தில் வெளியாகிய படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ மற்றும் நஸ்லென் கே கஃபூர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஷியாம் மோகன், மீனாக்‌ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். ஃபகத் ஃபாசில் இப்படத்தை தயாரித்துள்ளார். 


சமீப காலத்தில் மலையாளத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற மூன்று படங்கள் பிரேமலு, பிரமயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ். இதில் முதலில் வெளியாகி பிரேமலு இளைஞர்களை அதிகம் கவர்ந்தது. பிரமயுகம் மற்றும் மஞ்சுமெல் பாய்ஸ் சீரியஸான ஒரு அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு கொடுத்தன என்றால், பிரேமலு படம் மிக திரையரங்கமே குலுங்கி குலுங்கி சிருக்கும் வகையிலான ஒரு படமாக அமைந்தது.






கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என மூன்று நிலப்பரப்புகளில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பது ஒரு தலைக் காதல், மிடில் கிளாஸ் பின்னணியைக் கொண்ட இளைஞன் ஐடியில் வேலை செய்யும் பெண்ணை ஒருதலையாக காதலிப்பது, அவனது காதலுக்கு உதவும் நண்பன் என வழக்கமான ரொமாண்டிக் காமெடி படத்திற்கான கதை தான் என்றாலும், மிக இயல்பான கதைசொல்லலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் இந்தப் படத்தை தனித்துவமானதாக மாற்றியிருக்கின்றன. 


தமிழ் டப்பிங்கில் வெளியாகும் பிரேமலு



மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை பிற மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் இப்படம் தெலுங்குவில் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், தற்போது தமிழில் வரும் மார்ச் 15ஆம் தேதி  இப்படம் வெளியாக இருக்கிறது.


இந்தப் படத்தின் விநியோக உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. பிரேமலு படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான அதே ட்ரெய்லர் தான் என்றாலும் தமிழ் டப்பிங் கொஞ்சம் செயற்கையாக இருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். படத்தை மலையாளத்தில் பார்த்த ஃபீலை தமிழ் டப்பிங் கெடுக்காமல் இருந்தால் சரி என்று இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்




மேலும் படிக்க : Premalu Movie Review: ஒருதலை காதலின் அழகு.. இளம் வயதினரை கவர்ந்த “பிரேமலு” பட விமர்சனம் இதோ!