நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.


இதுகுறித்துச் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளின் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகி வந்த சூழலில், 2017-ல் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது.


ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியான மருத்துவப் படிப்பு


நீட் தேர்வு, மருத்துவப் படிப்பை ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக்கி விட்டது. அதனால்தான் நீட் தேர்வை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்த்து வருகிறோம். ஆனால் நமக்கு ஒத்துழைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.


தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் குரலாக மாறி வருகிறது. மேற்கு வங்கம், பிஹார், உ.பி. மாநிலங்கள் நீட் தேர்வை எதிர்க்கத் தொடங்கியுள்ளன.


நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 


இதைத் தொடர்ந்து ஒருமனதாக இந்தத் தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 


தீர்மானம்


“கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின்‌ மருத்துவக்கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும்‌ வகையிலும்‌, பள்ளிக்‌ கல்வியை அவசியமற்றதாக்கும்‌ வகையிலும்‌, மாநில மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ மாணவர்களைச்‌ சேர்க்கும்‌ உரிமையை மாநில அரசுகளிடம்‌ இருந்து பறிக்கும்‌ வகையிலும்‌ அமைந்துள்ள நீட்‌ தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்‌. 


இந்தத்‌ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளிக்‌ கல்வியில்‌ மாணவர்கள்‌ பெறும்‌ 12-வது வகுப்பு மதிப்பெண்களின்‌ அடிப்படையில்‌ மருத்துவ மாணவர்‌ சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்தச்‌ சட்டமன்றப்‌ பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட்‌ விலக்கு சட்ட முன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல்‌ அளிக்க வேண்டும்‌.


தேசிய மருத்துவ ஆணையச்‌ சட்டத்தில்‌ திருத்தம்


தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும்‌ இந்தத்‌ தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும்‌ தற்போது எதிர்த்து வரும்‌ நிலையில்‌, தேசிய அளவில்‌ நீட்‌ தேர்வு முறை கைவிடப்படும்‌ வகையில்‌ தேசிய மருத்துவ ஆணையச்‌ சட்டத்தில்‌ தேவைப்படும்‌ திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும்‌ தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."


இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.