நீலகிரியில் இருந்து முதன்முறையாக மருத்துவம் படிக்க இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி தேர்வாகி உள்ளார். நீட் தேர்வில் நான்கு முறை முயற்சித்து, நான்காவது முறையில் வெற்றிக் கனியைச் சுவைத்துள்ளார்.
இருளர் பழங்குடியின் முதல் மருத்துவ மாணவியானது எப்படி என்பது குறித்து ABP Nadu சார்பில் ஸ்ரீமதியிடம் பேசினேன்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்...
நீலகிரி மாவட்டத்தைச் சுற்றிலும் இருளர், கோத்தர், குரும்பர், பணியர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்கள் வசித்து வருகிறோம். கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் அடுத்த தும்பிபெட்டு பகுதியில் உள்ள இருளர் பழங்குடிகள் நாங்கள். அப்பா பாலன், தேயிலை எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். அம்மா ராதா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். என்னுடைய தங்கை ஜனனி 10ஆம் வகுப்பு படிக்கிறார்.
எங்கு படித்தீர்கள்?
நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று என்னைவிட எனது பெற்றோர் ஆசைப்பட்டனர். புனித அந்தோணியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன். ஹில்போர்ட் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளை முடித்தேன். 2019-ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
நீட் தேர்வுக்குத் தயாரானது எப்படி?
பிளஸ் 2 முடித்தபோதே, சுயமாகப் படித்து நீட் தேர்வை எழுதினேன். ஆனால் வெற்றி பெறவில்லை. 2 ஆண்டுகள் நானாகவே யூடியூப் உள்ளிட்ட வீடியோக்களைப் பார்த்துப் படித்தேன். வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கோவையில், தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். அப்போதும் தோல்வியே பரிசாகக் கிடைத்தது.
பிறகு என்ன நடந்தது?
தொடர்ந்து 3 ஆண்டுகள் ஏமாற்றத்தைச் சந்தித்தாலும், என்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. 3ஆவது முறை 282 மதிப்பெண்களை வாங்கி இருந்தேன். அப்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருந்தது. போதிய பொருளாதார வசதி இல்லாததால், அப்போது மருத்துவப் படிப்பில் சேரவில்லை.
4ஆவது முறையாக 2022ஆம் ஆண்டு நீட் தேர்வை எழுதினேன். தேர்வு முடிவுகளில் 370 மதிப்பெண்கள் பெற்றேன். மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
வீட்டில் இருவருமே மகள்கள். 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து மருத்துவப் படிப்புக்குத் தயாராகப் பெற்றோர்கள் ஒத்துக் கொண்டார்களா?
சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்பதுதான் என் கனவு. எனினும் பெற்றோருடைய முழு ஆதரவுதான் நான் மருத்துவ மாணவியாக முதல் காரணம். நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் இல்லை என்றால், என்னால் மருத்துவ மாணவி ஆகி இருக்க முடியாது. வருங்காலத்தில் குழந்தைகள் நல மருத்துவராக விரும்புகிறேன்.
தேர்வுக்கு எப்படித் தயார் ஆனீர்கள்?
விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கைதான் என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்று நினைக்கிறேன். நீட் பயிற்சி மையத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள், தேர்வு இருக்கும். பிறகு அறைக்கு வந்து மீண்டும் படிப்பேன். சில தினங்களில் அதிகாலை 4 மணி வரையெல்லாம் படித்திருக்கிறேன்.
உங்களின் சக பழங்குடி மாணவிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வாய்ப்பு தானாக உருவாகாது. நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் படித்தால், நிச்சயம் வெற்றி பெறலாம் என்று மாணவி ஸ்ரீமதி தெரிவித்தார்.
தனியார் பள்ளியில் படித்ததால், தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற முடியாத சூழலிலும், தொடர்ந்து முயற்சி செய்து இருளர் பழங்குடி இனத்தின் முதல் மருத்துவ மாணவியாக மாறி, விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கான உதாரணமாகத் திகழ்கிறார் ஸ்ரீமதி.