10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வகுப்பு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அவ்வாறு எதுவுமில்லை என்று கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


அனைத்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஜூன் 27) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொள்ள உள்ளார். 2 நாள்கள் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் பொதுத் தேர்வைச் சந்திக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வகுப்பு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் மாலை 5 முதல் 5.30 மணி வரை இந்த சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியானது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


எனினும் இந்தத் தகவலை பல்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது. இதுகுறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது ஆண்டாட்டு காலமாக நடைபெறுவதுதான். 


தேவைப்படும், விரும்பும் பள்ளிகள் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம். எனினும் இது கட்டாயமில்லை. அறிவுறுத்தலாகவே முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தனர். 


கூட்டத்தில் என்ன ஆலோசனை?


 முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், 11, 12 ஆகிய மேல்நிலைப் பள்ளி வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டத்தை நீட்டிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் அரசுப் பள்ளிகளில் நிலவி வரும் துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள் பற்றாக்குறை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் பேசப்பட்டது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தொடங்கிய துணைத் தேர்வுகள்


10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு  இன்று (ஜூன் 27ஆம் தேதி) தொடங்கி நடைபெற்றுள்ளது. அதேபோல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் துணைத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது. இதற்கிடையே தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்: TNPSC Results Schedule: டிசம்பரில் குரூப் 2 தேர்வு முடிவுகள்; 19 தேர்வுகளின் ரிசல்ட் அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- முழு விவரம் 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.