சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், பிப்.26 முதல் தொடர் முற்றுகை நடத்தப்படும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்புசங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோரிக்கைகள் என்னென்ன?
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார்20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல 90 சதவீத ஆசிரியர்களின், குறிப்பாக பெண் ஆசிரியா்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் வகையிலும், தொடக்கக் கல்வித்துறையில் 60 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி மாநில முன்னுரிமையைக் கொண்டு வந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணி முன்னுரிமை மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் உட்பட அன்று முன்வைக்கப்பட்ட 50 அம்சக் கோரிக்கைகள் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்ரவரி 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. டிட்டோஜேக் சங்கம் போராட்டத்தை முன்னெடுத்தது. எனினும் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
தினந்தோறும் போராட்டம், கைது
தொடர்ந்து தினந்தோறும் போராட்டம் தொடங்கும் நிலையில், காவல்துறையினர் ஆசிரியர்களைக் கைது செய்து வருகின்றனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் கூறும்போது, ’’இடைநிலை ஆசிரியர்களுக்கு ''சம வேலைக்கு சம ஊதியம்'' தேர்தல் வாக்குறுதி 311-ஐ நிறைவேற்றக் கோரி கடந்த ஐந்து நாடகளாக டிபிஐ வளாகத்தில் தொடர முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இன்றும் நாளையும் போராட்டம் தொடரும். மேலும் இதுவரை அரசு அழைத்து கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யாத காரணத்தினால், அடுத்த கட்டப் போராட்டத்திற்கு எங்களது அமைப்பின் சார்பாக தயாராகிறோம்.
சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம்
இரண்டொரு நாளில் அழைத்துப் பேசி கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் வரும் பிப்.26 மாநிலத் தலைநகரான சென்னையில் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடங்கும். அதேபோல அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கைதாகும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் கோரிக்கையை அழைத்துப் பேசி முடிவு செய்யாததை கண்டித்தும் மாவட்டத் தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
எனவே போராட்டத்தை இன்னும தீவிரமாக்காமல் தமிழக அரசின் அழைத்துப் பேசி உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றித் தர வேணடும் என கேட்டுக் கொள்கிறோம்’’ என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.