அன்றைய தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த, தேசிய பாதுகாப்பு அகடமி, கடற்படை அகடமி ஆகியவற்றுக்கான தேர்வு நவம்பர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தேர்வானது முன்னதாக கடந்த மே 9ஆம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வு, வருங்கால வைப்பு நிதி அமைப்பு செயலாக்க அதிகாரி- கணக்கு அலுவலர் பணிக்காக நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. கொரோனா இரண்டாவது அலையின் பரவல் காரணமாக, வருங்கால வைப்பு நிதித் திட்ட அலுவலர் தேர்வும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வாணையம் கடந்த ஏப்ரலில் அறிவித்தது. இதே காரணத்தால் நாடளவில் அனைத்துவிதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன.
இப்போது, செப்டம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தேர்வுக்கு, பழைய நுழைவுச் சீட்டையே பயன்படுத்தலாமா அல்லது புதிதாக நுழைவுச்சீட்டு வழங்கப்படுமா என்பது பற்றி எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.
இந்தத் தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். எல்லா கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படும். கேள்விகளின் தன்மை கொள்குறி வகையாக அதாவது நான்கு பதில்களைக் கொடுத்து அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி இருக்கும். கேள்வித் தாளானது ஆங்கிலம் அல்லது இந்தி இரண்டு மொழிகளிலும் இருக்கும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடையும் போட்டியாளர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 75 சதவீதமும் நேர்காணலுக்கு 25 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்தத் தேர்வின் மூலம் 421 வருங்கால வைப்பு நிதித் திட்ட அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் 4ஆம் தேதியன்று இந்தத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதே நாளில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துவது என தேர்வாணையம் தீர்மானித்தது.
முன்னதாக, கொரோனா காரணமாக பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத்தேர்வுகளும் 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மாநிலங்களில் தொடங்கிய ரத்து அறிவிப்பு நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியப் பள்ளிகளுக்கும் சேர்ந்ததாக மாறியது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் கூடி, மத்திய கல்வி வாரிய +2 பொதுத்தேர்வுகளை ரத்துசெய்வது என முடிவெடுத்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான மதிப்பெண் தீர்மானிக்கும் முறை பற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் மத்திய அரசுத் தரப்பில் பதில் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அந்தப் பணியில் மத்திய கல்வி வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.