திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஜெயமாதா நகர் பகுதியை சேர்ந்தவர் திலீபன் (28). பெயிண்டர் வேலை செய்து வரும் இவருக்கும் இதே பகுதியை  சேர்ந்த காவியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ,  இவர்களுக்கு ஒன்றரை வயதில் சன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளார் . 


குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள திலீபன் , வேலைக்கு செல்லாமல் தினமும் மனைவி மற்றும் அவர்களது உறவினர்களிடம் குடிக்க பணம்கேட்டு காவியாவை சித்ரவதை செய்து வந்துள்ளார் .




தற்போது ஏழு மாதம் கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் காவியாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் அவரது கணவர் திலீபன்  . இதனை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்துவந்துள்ளனர் .


இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு  மது போதையில் இருந்த திலீபன் தனது மனைவி காவியாவுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார் .


ஐ.ஓ.பி ஏ.டி.எம் கொள்ளையில், வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை..!


ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் வலுக்கவே , திலீபன் தனது குழந்தை சன்சிகாவை பக்கத்துக்கு வீட்டில் விட்டுவிட்டு மீண்டும்  மனைவி காவியாவை தாக்கியுள்ளார் .


பின்னர் இரவு 11 .30 மணி அளவில் , வீட்டில் இருந்து வெளியே வந்த திலீபன் , தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பக்கத்து வீட்டுக்காரர்களிடம்  தெரிவித்துள்ளார் .


அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவியா இறந்த தகவலை உறுதிப்படுத்திக்கொண்டு   , உடனடியாக  காவியாவின் தந்தை  ராஜகுமார்க்கு தெரிவித்துள்ளனர் . மிகுந்த கோபத்துடன் அங்கு வந்த காவியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் , அங்கிருந்து  தப்பிக்க முயன்ற திலீபனை சரமாரியாக தாக்கினர் . இதில் படுகாயமடைந்த திலீபன் ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .


மேலும் காவியாவின் தந்தை ராஜகுமார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர் .  காவியாவின் குழந்தையை மீட்டு காவியாவின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். 


தொடர்ந்து இதுகுறித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட ஜோலார்பேட்டை போலீசார் , திலீபன் குடித்துவிட்டு மனைவி காவியாவை  சித்ரவதை செய்து வந்ததை உறுதி படுத்திக்கொண்டனர் . மேலும் திருமணம் நடந்து  3 வருடங்களே ஆகும் நிலையில் இந்த வழக்கை  வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர் .


கோவை: 'அடிக்கடி செல்போன் பேசாதே' - கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்




காவியாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் திலீபன் மீது ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ள நிலையில் , குற்றவாளி திலீபன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்துவருவதால்  போலீஸ் மற்றும் வருவாய் அலுவலர்கள் அடங்கிய தனிக்குழு இன்று திலீபனிடம் மருத்துவமனையில் விசாரணை நடத்தவுள்ளனர்.