446 பொறியியல் கல்லூரிகள் கலந்துகொண்ட 2022ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வின் நிறைவில், 60 ஆயிரம் இடங்கள் காலியாக  உள்ளன. இதில் 14 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை. 6 அரசுக் கல்லூரிகளால் 50 சதவீத இடங்களைக் கூட நிரப்ப முடியவில்லை.


பொறியியல் 4 கட்டக் கலந்தாய்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இதில் 446 பொறியியல் கல்லூரிகள் கலந்துகொண்டன. இதற்கிடையே முதல்கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. கட் - ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்றனர்.


இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டக் கலந்தாய்வு செப். 25 முதல் 27ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும் நடைபெற்றது. நான்காம் கட்டக் கலந்தாய்வு இன்று (அக்.29) தொடங்கி உள்ளது. இந்தக் கலந்தாய்வு அக்.31 வரை நடைபெற உள்ளது.


கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற புதிய முறையும் நடப்பாண்டு முதல் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் பொதுசெலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் 4ஆவது கட்டக் கலந்தாய்வு முடிவில், 30,938 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 3,660 பேருக்கு அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் இடம் உறுதி செய்யப்பட்டு, வழங்கப்பட்டுள்ளது. 




இதன்மூலம் மொத்தமாக 93,571 இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டு 4ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில் 88,596 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் இந்த ஆண்டு 60.65 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது 60 ஆயிரத்து 707 இடங்கள் இன்னும் காலியாக  உள்ளன. முன்னதாக, துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று (நவம்பர் 13)  மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 


இதுகுறித்துக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறும்போது, ''2022ஆம் ஆண்டில் 55,846 பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. 14 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை மாணவர்கூட சேரவில்லை. 


இதைவிட ஆச்சரியமாக 6 அரசுக் கல்லூரிகளால் 50 சதவீத இடங்களைக் கூட நிரப்ப முடியவில்லை. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். தரமான கல்வியை அளிக்கும் கல்லூரிகளே இனி மாணவர்களைத் தக்க வைக்க முடியும் என்று தெரிவிக்கிறார். 


12 கல்லூரிகள் மட்டுமே 100 சதவீத இடங்களை நிரப்பியுள்ளன. இதில், 3 கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும். கடந்த கல்வி ஆண்டில், 16 கல்லூரிகள் அனைத்து இடங்களையும் நிரப்பின. கடந்த ஆண்டு 7 கல்லூரிகளில் யாருமே சேரவில்லை. 


60 கல்லூரிகள் 90 சதவீத இடங்களை நிரப்பியுள்ளன. இது கடந்த ஆண்டு 85 கல்லூரிகளாக இருந்தது. 113 கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டிலும் இதே எண்ணிக்கை இருந்தது. 


237 கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் 


இந்த ஆண்டு 237 கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 218 கல்லூரிகளில் 50% இடங்கள் நிரம்பி இருந்தன. 36 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.  



எந்தப் படிப்புக்கு வரவேற்பு அதிகம்?


பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை கணினி மற்றும் ஐடி தொடர்பான படிப்புகள் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. 45 சதவீத மாணவர்கள் அதை அடுத்து, இசிஇ (ECE) பிரிவை அதிக மாணவர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். 


அதேபோல மெக்கானிக்கல், சிவில் படிப்புகளைப் பெரும்பாலான மாணவர்கள் எடுக்கவில்லை. மெக்கானிக்கல் பாடப் பிரிவிவில் 85-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்க மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது. 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சிவில் படிப்பில் ஒற்றை இலக்க சேர்க்கை மட்டுமே நடந்துள்ளது'' என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.




92%-க்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்பட்ட தனியார் கல்லூரிகளின் தரவரிசை: 


1. எஸ்எஸ்என் கல்லூரி, சென்னை
2. பிஎஸ்ஜி தொழில்நுட்ப நிறுவனம்
3. கலைஞர் தொழில்நுட்ப நிறுவனம்
4. சென்னை தொழில்நுட்ப நிறுவனம்
5. லயோலா கல்லூரி (Loyala icam)
6. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
7. ரத்னா தொழில்நுட்ப வளாகம்
8. விவேகானந்தா பொறியியல் கல்லூரி (பெண்கள்)
9. ஆர்எம்கே பொறியியல் கல்லூரி
10. குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி


கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது மாணவர் சேர்க்கை குறைந்து, காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பொறியியல் கல்லூரிகள் தங்களை சுய மதிப்பீடு செய்து, ஆசிரியர்களின் கற்பித்தல் தரம், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.