முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் அழைத்துவரப்பட்டு எவ்வாறு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது என்பது குறித்து குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது.



பொதுமக்களின் பிரச்னைகளை எவ்வாறு அரசு ஊழியர்கள் கையாளுகிறார்கள்? அவர்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது? என்பது குறித்து குழந்தைகள் முன்னிலையில் மனுக்கள் பெற்றுக்கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு ஒவ்வொரு துறைக்கும் அனுப்பப்படுகிறது என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் மேனகா பள்ளி குழந்தைகளுக்கு விளக்கினார். வருங்காலங்களில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அரசுப் பணி ஏற்கும்போது மக்களின் பிரச்னைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து கற்றுக்கொள்ளும் வகையில் இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. 


பின்னர் பள்ளிக் குழந்தைகளிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவரது அறையில் அழைத்து மாணவ, மாணவிகளுக்கு  ரோஜா பூ, சாக்லேட் கொடுத்து குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் கூறினார்.  அதன்பின் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது குழந்தைகள் மக்கள் குறைதீர் கூட்டத்தை பார்வையிட்டது பற்றி கேட்டறிந்தார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் குழந்தைகள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். குழந்தைகளிடம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பதிலளித்தார். தொடர்ந்து குழந்தைகளிடம் உரையாற்றிய அவர், அரசு பள்ளியில் பயின்று பல அலுவலகங்களில் பணியாற்றி இன்று சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ளேன். இதேபோன்று நீங்களும் பிற்காலத்தில் அதிகாரிகளாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார். 



பின்னர் மாவட்ட ஆட்சியர் அறையில் மாணவர்கள் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றி பாடல்களை பாடியும், அவரது பெருமை குறித்தும், எதற்காக குழந்தைகள் தினமாக அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுவது என்பது பற்றியும் பேசினர். அதன்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவசர கண்காணிப்பு அறை, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் அறை, வீடியோ கலந்தாய்வு அறை, கூடுதல் ஆட்சியர் அறை உட்பட பல்வேறு அறைகளில் நடக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாணவர்களிடம் விளக்கினார். 


இதைப் பற்றி மாணவர்கள் கூறுகையில், முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்து வரப்பட்டு அனைத்து துறை பற்றியும் விளக்கப்பட்டது. மேலும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அமர வைத்து அங்கு நடக்கும் பணிகளை பார்வையிட வைத்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எங்களை அவசர கண்காணிப்பு அறைக்கு அழைத்துச் சென்று அங்கு நடக்கும் பணிகள் குறித்து பொறுமையாக விளக்கினார். இந்த அனுப்பவும் புதிதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறினார்.