திருநங்கைகள் கைது.




கரூரில் இளைஞர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் 27 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் எஸ்பி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர்.


கரூர் நகர காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கரூர் பேருந்து நிலையம் அருகில் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற போது பேருந்து நிலையத்தில் இருந்த இசைப்பிரியா (24), ராகவி (27), தில்ஷிகா(23), இனியா (22) ஆகிய திருநங்கைகள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் ரூ.27,500/- பணத்தை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது.


 




இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருநங்கைகளிடமிருந்து 2 பவுன் செயின் மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரூர் நகர காவல் நிலையத்தில் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து திருநங்கைகள் வழிப்பறி செய்த நகை மற்றும் பணத்தை மீட்டது தொடர்பாக, கேள்விபட்டு மேற்படி சம்பவத்தை போன்று திருநங்கைகளிடம் நகை மற்றும் பணத்தை இழந்தவர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர். புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.


 




 


கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் யாசகம் என்ற பெயரில் இளைஞர்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டு உருட்டு கட்டையுடன் தாக்குதல் நடத்தியதாக  திருநங்கைகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் பொதுமக்கள் புகார் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரங்களைக் கொண்டு  திருநங்கைகள் சுமார் 10 பேரை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து திருநங்கைகள் போலீசாரை சூழ்ந்து கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவுவதால் அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு, காவல் நிலைய நுழைவு வாயில் கதவுகள் சாத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.




இதேபோல கரூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் மினி பேருந்து நிலையம் சுக்காலியூர் பைபாஸ் சேலம் சாலை ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் திருநங்கைகள் வழியில் செல்பவரிடம் அடாவடியாக நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் அட்டகாசம் செய்து அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். அதே நிலையில் அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் தகாத வார்த்தையை பேசியபடி உருட்டு கட்டையால் தாக்க சென்றனர்.




இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கரூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், திருநங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும் மாதம் தோறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


தமிழக அரசு திருநங்கைகளுக்கான பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டமும் திருநங்கைகளிடம் தொழில் தொடங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதனை முறையாக பயன்படுத்தி திருநங்கைகள் தொழில் செய்து தங்களது வாழ்வாரத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.