மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கோடை வெயில் மற்றும் அனல் காற்று அதிகமாக வீசுவதால் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்.  கோடை வெயிலில் அதிக உஷ்ணநிலையில் இருப்பதால் கடுமையான வேலைகளை தவிர்க்கவும்.



 

 பயணம் செல்லும் பொழுது, குடிநீரை கொண்டு செல்லவும்.  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையும், கால்நடைகளையும் அனுமதிக்க வேண்டாம்.  மயக்கமான நிலை அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். O.R.S, வீடுகளில் தயாரிக்கும் லஸ்ஸி, அரிசி கஞ்சி எலும்மிச்சம் பழச்சாறு மற்றும் மோர் ஆகியவைகளை பருவி நீரிழப்பைத் தவிர்க்கவும். தற்பூசணி, நுங்கு, இளநீர் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தவும். கால்நடைகளை நிழல் உள்ள இடத்தில் நிறுத்தவும், மற்றும் அவைகளுக்கு அதிகமான அளவு தண்ணீர் குடிப்பதற்க்கு கொடுக்கவும். மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுர் கேபிள் டிவியில் கோடை வெயிலின் தாக்கம் குறித்து செய்திகள் மூலம் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 

மாவட்டத்தின் அனைத்து வட்டத்தில் கோடை வெயிலின் தன்மை குறித்து விளம்பரங்கள் மற்றும் பிட் நோட்டீஸ், முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் வெயிலினால் பாதிக்கப்பட்டவருக்கு கீழ்க்காணும் சிகிச்சை அளி அளிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

பாதிக்கப்பட்ட நபரை குளிர்ச்சியான நிழல் உள்ள இடத்தில் படுக்க வைக்கவும், குளிர்ந்த தண்ணீரில் துணியை நனைத்து கொண்டு உடல் முழுவதும் தடவலாம், தலையின் மீது சாதாரண தண்ணீரை ஊற்றவும், உடல் வெப்பநிலைக்கு வரும் வரை இதனை தொடரலாம்.

பாதிக்கப்பட்ட நபருக்கு O.R.S, எலுமிச்சை பழச்சாறு போன்ற பானங்களை குடிப்பதற்கு கொடுக்கவும்.

 பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இலவசஆம்புலன்ஸ் எண்:108ற்கு தகவல் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் :1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண் :1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.

தட்பவெட்ப நிலைக்கு தக்கவாறு தங்களை தயார்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது,

குளிர் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள், ஒரு வார காலத்திற்க்கு உஷ்ணநிலையினை தங்களது உடம்பு ஏற்றுக் கொள்ளும் வரை உடனடியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். 

அதிக அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். வெளியில் உள்ள உஷ்ணநிலை தங்களுக்கு சாதகமாக மாறும் வரை தங்களை பாதுகாத்துக் கொள்ள உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.