முன்னாள் பிரதமர் வி.பி. சிங், சமூக நீதிக்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில், அவரது திருவுருவ சிலை பிரம்மாண்டமாக சென்னையில் நிறுவப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்த நிலையில் வி.பி.சிங்கின் பேத்திகள் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.


வி.பி.சிங்கிற்கு சிலை


முன்னாள் பிரதமர் வி.பி. சிங், சமூக நீதிக்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில், அவரது திருவுருவ சிலை பிரம்மாண்டமாக சென்னையில் நிறுவப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (வியாழக்கிழமை, ஏப்.20) அறிவித்த நிலையில், வி.பி. சிங்-ஐ சமூக நீதியின் நாயகன் எனப் போற்றிய மு.க. ஸ்டாலின், அவர் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதிலும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தார் என்றார். 



முதல்வர் தந்த அங்கீகாரம்


மேலும், "பிபி மண்டல் தலைமையிலான இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் அவர்தான்," என்றார். அவர் பெருமையை பட்டியலிட்டு, அவரது சிலை சென்னையில் நிறுவப்படும் என்று அறிவித்த நிலையில், தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர் விபி சிங்கின் பேத்திகள். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பேத்திகள் ஆன, ஆத்ரிஜா மஞ்சரி சிங், மற்றும் ரிச்சா மஞ்சரி சிங் ஆகிய இருவரும், தனித்தனியாக வீடியோவில் பேசியுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்: Vegetable Price: மாங்காய் சீசன் ஸ்டார்ட் ஆயிடுச்சு மக்களே.. கிலோ ரூபாய் 15 மட்டுமே.. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ..


டிஆர்பி ராஜா பதிவு


இந்த இரு வீடியோக்களையும் திமுக வின் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் இரண்டு வீடியோக்களையும் வெளியிட்ட அவர், "சமூக நீதி நாயகன் வி.பி.சிங்கின் பேத்திகளான ஆத்ரிஜா மற்றும் ரிச்சா மஞ்சரி சிங் ஆகியோர், அவர்களின் தாத்தா, மாண்டாவின் 41வது ராஜா பகதூர், உத்தரபிரதேசத்தின் 12வது முதல்வர், ராஜ்யசபாவின் 15வது தலைவர், முன்னாள் நிதியமைச்சர், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளிவிவகாரத்துறை அமைச்சர், இந்தியாவின் 7வது பிரதமர், தலைவர் கலைஞரின் பெரும் மரியாதையைப் பெற்ற, மறைந்த திரு விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்களுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக மாண்புமிகு தமிழநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்", என்று எழுதினார். 






வீடியோவில் பேசிய பேத்திகள்


"எங்கள் தாத்தா வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைத்து மரியாதை செய்யப்படுகிறது என்ற செய்தியை கேட்டு எங்கள் குடும்பமே மகிழ்ந்தது. இந்த மரியாதையை செய்வதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்", என்று ஆத்ரிஜா மஞ்சரி சிங் தெரிவித்தார். "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கள் தாத்தா வி.பி.சிங்கிற்கு சென்னை மாநகரில் பிரம்மாண்ட சிலை வைக்கப்படும் என்று அறிவித்தது எங்களை நெகிழச்செய்தது. இது தமிழ் மக்கள் எங்கள் தாத்தா மீது வைத்திருக்கும் அன்பையும், பிணைப்பையும் குறிக்கிறது", என்று ரிச்சா மஞ்சரி சிங் கூறினார்.