பொறியியல் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.


அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் தனித்தனி கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் கட்டுப்படுத்தி வருகிறது.


ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்லூரிகள் திறப்பு,  கட்டணம் திருப்பி அளிப்பு, செமஸ்டர் தேர்வு தேதிகள் உள்ளிட்ட கல்லூரி செயல்பாடுகளுக்கான தேதிகளை, வருடாந்திர கால அட்டவணையாக ஏஐசிடிஇ வெளியிட்டு வருகிறது. அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. 


அதன் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


’’தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி வரை அங்கீகாரத்துக்கு அல்லது நிராகரிப்புக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல ஏஐசிடிஇ சார்பில் அங்கீகார நீட்டிப்புக்கான அனுமதி வழங்கும் பணிகளுக்கு ஜூன் 30 ஆம் தேதி கடைசி ஆகும். 


இதை அடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் வாரியங்கள், கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்குதலை ஜூலை 31ஆம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. தொழில்நுட்பப் படிப்புகளுக்கான இடங்களை மாணவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் வேண்டாம் என்று ரத்து செய்தால், முழுமையான கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும். 


செப்டம்பர் 15-ம் தேதி முதல் வகுப்புகள்


காலியாக உள்ள இடங்களில் செப்டம்பர் 15-ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்கலாம். தொழில்நுட்பப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். அதேபோல பாலிடெக்னிக் முடித்து நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கும் செப்டம்பர் 15-ம் தேதி கடைசித் தேதி ஆகும். 


அதேபோல முதுநிலை கல்வி நிறுவனங்களில் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் ரத்து செய்தால், முழுமையான கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும். 


தொலைதூர, திறந்த நிலை மற்றும் இணைய வழிப் படிப்புகளைக் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை செயல்பாடுகளில் யுஜிசி வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்’’ 


இவ்வாறு ஏஐசிடிஇ சார்பில் கூறப்பட்டுள்ளது. 


எனினும் பொறியியல் கலந்தாய்வு குறித்த தேதி விவரங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதையும் வாசிக்கலாம்: 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான அனைத்து பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.