நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கான புதிய தேதிகளை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இதன்படி இன்று (செப்டம்பர் 10) முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாளான இன்று பல்வேறு மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். 


பின்னணி என்ன?


இந்த ஆண்டு 1,58,157 மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியானது. 1.48 லட்சம் பொறியியல் இடங்களுக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. இதனால் விண்ணப்பிப்பவரில் பெரும்பாலும் அனைவருக்குமே இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் வெளியானது.  குறிப்பாக OC- 7615, BC- 74,605, BCM - 7,203, MBC- 42,716, SC- 21,723, SCA- 3 ஆகிய பிரிவில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.


எனினும் இந்த ஆண்டு மாணவர்களுக்கான கட் -ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன. 200க்கு 200 கட் -ஆஃப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10 ஆக மட்டுமே இருந்த நிலையில், இந்த முறை 133 பேர் 200க்கு 200 கட் -ஆஃப் பெற்றுள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10,900 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 22,587 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன.


யார், யாருக்கு எந்த வரிசையில் கலந்தாய்வு?


முதலில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி, நடைபெற்றது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது. 


பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு


இதற்கிடையே ஆகஸ்ட் 25ஆம் தேதி)முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது. எனினும்  நீட் தேர்வு முடிவுகள் தேதி அப்போது வெளியாகாததால்,பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு கால வரையறையின்றி, ஒத்திவைக்கப்பட்டது.  


இதையடுத்து செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று என்டிஏ அறிவித்தது. இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ’’வழக்கம்போல 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். எல்லாப் பிரிவுகளிலும் உள் இட ஒதுக்கீடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். 


4 கட்டங்களாக நவம்பர் 3ஆம் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். நவம்பர் 15ஆம் தேதி அன்று துணைக் கலந்தாய்வு தொடங்கி, நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எஸ்சிஏ டூ எஸ்சி கலந்தாய்வு நவம்பர் 19ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிகிறது. அன்றைய தினமே கலந்தாய்வு முடிவடைகிறது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க:நீட் பயிற்சி மையம் செல்லாமலேயே முதல் முயற்சியில் 503 மதிப்பெண்கள்; எப்படி? குரோம்பேட்டை அரசுப்பள்ளி மாணவன் பேட்டி