பொறியியல் கலந்தாய்வு நாளை ஆன்லைனில் தொடங்குகிறது. இதில், தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் குறை இருந்தாலோ, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் விடுபட்டிருந்தாலோ தொடர்புகொள்ள அரசின் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் 1800- 425-0110 ஆகும். குறைபாடுகளை நிவர்த்தி செய்ய இன்று (ஆக.19) கடைசித் தேதி ஆகும்.
மாணவர்கள் ஆகஸ்ட் 19 வரை பொறியியல் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று குறைகளை நிவர்த்தி செய்யலாம். இதற்காக இந்த ஆண்டு 110 டிஎஃப்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை (ஆகஸ்ட் 20) சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது.
மாணவர்கள் கல்லூரிகளின் செயல் திறன், அதாவது தேர்ச்சி விகிதப் பட்டியலை (ஏப்ரல் - மே 2021 மற்றும் நவம்பர்- டிசம்பர் 2021) அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதைக் கொண்டு கல்லூரிகளின் தரத்தை அறிந்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு 1,58,157 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. 1.48 லட்சம் பொறியியல் இடங்களுக்கு 1.58 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன. இதனால் விண்ணப்பிப்பவரில் பெரும்பாலும் அனைவருக்குமே இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக OC- 7615, BC- 74,605, BCM - 7,203, MBC- 42,716, SC- 21,723, SCA- 3 ஆகிய பிரிவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
எனினும் இந்த ஆண்டு மாணவர்களுக்கான கட் -ஆஃப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன. 200க்கு 200 கட் -ஆஃப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10 ஆக மட்டுமே இருந்த நிலையில், இந்த முறை 133 பேர் 200க்கு 200 கட் -ஆஃப் பெற்றுள்ளனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10,900 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 22,587 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் https://cutoff.tneaonline.org/ என்ற இணைய முகவரி மூலம் தங்களின் கட் -ஆஃப் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம்.
யார், யாருக்கு எந்த வரிசையில் கலந்தாய்வு?
முதலில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்புக் கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 20) சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது.
கலந்தாய்வு செயல்முறைகள் என்ன?
* Accept and Join
* Accept and Upward
* Decline and Upward
* Decline and Move to next Round
* Decline and Quit
* Upward or move to next Round
இவை குறித்தும் கலந்தாய்வு நடைமுறைகள் பற்றியும் முழுமையாக https://static.tneaonline.org/docs/TNEA_Guidelines_Tamil.pdf?t=1660802499936 என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு தனியாக 2 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 22,587 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 431 கல்லூரிகள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன.
1,48,811 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்து முழுமையாக அறிய: https://static.tneaonline.org/docs/Academic_Rank.pdf?t=1660629396774
பொறியியல் கலந்தாய்வில் ஏதேனும் சந்தேகங்கள், குறைகள், கேள்விகள் இருந்தால் பொறியியல் சேர்க்கை சேவை மையங்களைத் தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண்களுடன் கூடிய மாவட்ட வாரியான மையங்களின் விவரங்களுக்கு: https://static.tneaonline.org/docs/7_List_of_TFCs.pdf?t=1660802499936