முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை 20 ஆண்டுகளாக தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டம் கண்டிதம்பட்டை சேர்ந்த ஏசுதாஸ் தலைமையில் 15க்கும் அதிகமானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை அருகே கண்டிதம்பட்டு வருவாய் கிராமத்தில் உச்சிமான்சோலையில் கடந்த 1979ம் ஆண்டு முன்னாள் ராணுவத்தினர், மொழிப்போர் தியாகிகள், நிலமற்ற ஏழைகள் என 21 பேருக்கு 24 ஏக்கர் நிலம் அரசால் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் நாங்கள் மானாவாரி விவசாயம் செய்து வந்தோம்.


இருப்பினும் நாளடைவில் போதிய மழையின்மையால் மானாவாரி விவசாயம் செய்ய முடியாமல் போனது. வானம் பார்த்து மழை பொய்து போனதால் நாங்கள் பயிர் சாகுபடி ஏதும் செய்யாமல் தரிசாக நிலத்தை அப்படியே விட்டு விட்டோம். இந்நிலையில் இந்த நிலத்துக்கு அருகில் நிலம் வைத்துள்ள தனியார் ஒருவர் கடந்த 2001ம் ஆண்டு அரசு வழங்கிய 24 ஏக்கரையும் ஆக்கிரமித்து அடைத்து விவசாயம் செய்து வருகிறார்.


ஒன்றல்ல, இரண்டல்ல இதுகுறித்து கடந்த 20 ஆண்டுகளாக வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்து வருகிறோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்பட்ட இந்த நிலத்தை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட சர்வேயரிடமும் பல முறை மனு அளித்துள்ளோம்.


 




 


எங்களின் எந்த முயற்சிக்கும் உரிய விதத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மேலும் வேதனையை ஏற்படுத்தியது. நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ள நிலையில் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் எங்களுக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு எங்களது நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். 20 ஆண்டுகளாக தனிநபரிடம் சிக்கியுள்ள இந்த நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்து மனு அளித்தவர்கள் தரப்பில் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்து, கொடுத்து விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டோம். ஆனால் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நிலத்தை அளவீடு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அனைவருக்கும் நல்லது செய்யும் மாவட்ட கலெக்டர் முன்னாள் ராணுவத்தினரின் இந்த மனு மீதும் கருணை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண