பி.இ பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் இதுவரை 2 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூடசேரவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் தற்போது நடந்து வருகிறது. அதில் முதற்கட்டமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கவுன்சிலிங் நடந்தது. அதற்குப் பிறகு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடந்தது. 31,662 பேர் இட ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 131 கல்லூரிகளில் 1 சதவீதம் கூட மாணவர்கள் சேரவில்லை. 5 சதவீதத்திற்கும் குறைவாக 248 கல்லூரிகளிலும், 10 சதவீதத்துக்கும் குறைவாக 306 கல்லூரிகளிலும், 25 சதவீதத்துக்கும் கீழ் 342 கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 98 கல்லூரிகளில் மட்டுமே 25 சதவீதத்திற்கும் கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

33 கல்லூரிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், எம்ஐடி உள்ளிட்ட 15 முன்னணி பொறியியல் கல்லூரிகளில் 98 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது.  61 சதவீத கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் 3 மற்றும் 4ம் கட்ட கவுன்சிலிங்கின் முடிவில் எத்தனை பேர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும். கல்லூரியில் ஒரு ஆள் சேராத அல்லது அட்மிஷன் குறைந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் 22 கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 21 கல்லூரிகள் மூடப்போவதாக அண்ணா பல்கலைக்கு கடிதம் கொடுத்துள்ளன. இதனால் இந்த ஆண்டு பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான இடங்கள் அதிக அளவில் காலியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்திருப்பது பற்றி கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம். தனியார் கல்லூரிகள் மக்களின் ஆசையை பயன்படுத்திக்கொண்டார்கள். தனியார் கல்லூரிகளில் தகுதி பெற்ற ஆசிரியர்கள், ஆய்வுக்கூடங்கள் இல்லை. மாணவர்கள் இண்டஸ்ட்ரியல் விசிட் செய்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பது இல்லை என்று குற்றம்சாட்டினார். இசிஇ, ட்ரிபிள் இ படித்தவர்களுக்கு என்ன வேலை கிடைத்தது என்று கேள்வி எழுப்பிய அவர்கள், தங்கள் படிப்பிற்கு சம்பந்தம் இல்லாது ஐடி துறையில் வேலை பார்க்கின்றனர் என்றார்.

அதோடு, 4 ஆண்டு படிப்பை படித்து முடித்தவர்கள் பலருக்கு வேலையே இல்லை. பலர் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளைப் பார்க்கின்றனர். இன்னும் பலர் அரியர்களை கூட க்ளியர் செய்யவில்லை என்று கூறிய ப்ரின்ஸ் கஜேந்திரபாபு, விழிப்புணர்வுடன் இருக்கும் மக்கள் பொறியியல் படிப்பைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்றார். இனிமேல் தான் மிகச்சிறந்த பொறியாளர்கள் உருவாகுவார்கள். இனிமேல் தான் சிறந்த பொறியியல் கல்லூரிகள் உருவாகும் என்றார். அதோடு தனியார் கல்லூரிகளின் வீழ்ச்சி நல்ல கல்விமுறைக்கான தொடக்கம் என்று அவர் கூறினார்.