பொறியியல் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அதிகளவிலான மாணவர்கள் சேர்ந்து உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் பொறியியல் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நாளை மறுதினம் தொடங்க உள்ளது. இதை அடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது உயர் கல்வித் துறைச் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:


’’தமிழக முதலமைச்சர் நமக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறார். இந்தி மொழி இணைப்பு குறித்தும், கலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பற்றியும் மத்திய அரசின் கருத்துகளுக்கு, முதலமைச்சர் தெளிவாக அறிக்கையில் பதில் கொடுத்துள்ளார். உயர் கல்வித்துறையில் தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உயர் கல்வித் துறையின் பொற்காலமாக இக்காலம் திகழ வேண்டும் என்ற அடிப்படையில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பொற்காலமாக இருக்க வேண்டும் என்றுதான் முதல்வரும் அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்ற வகையில்தான் மாணவர்களுக்கு சமூக நீதிக் கொள்கைகளைப் பின்பற்றி வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கையும் நடத்தப்படுகிறது.


மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படுவது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதால் தூக்கம் வரவில்லை என்று முதலமைச்சர் கூறியிருக்கலாம். மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே உணவு என்ற அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழுக்கு முக்கியத்துவம், முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் செயல்பட்டு வருகிறார்.






இன்னும் 1.1 லட்சம் பேருக்கு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் 3-வது கட்டமாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு ஒரே கட்டமாகக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் காலியிடங்கள் என்பவை இருக்காது. பொறியியல் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அதிகளவிலான மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்’’.


இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.