சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில், நேற்று இரவு 9 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் கையில் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை மிரட்டி உள்ளனர். பின்னர் அந்த தெருவில் கடைசியில் சித்தர் கோயில் சுற்றி புதர்மண்டி காலி இடம் உள்ளது. அங்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

 


 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது இந்த கும்பல் நாங்கள் தான் இங்கு பெரிய ரவுடி என கத்திக் கொண்டே கையில் இருந்த கத்தியால் அந்த தெருவில் நின்று கொண்டுந்த நவீன்(31), ஷபீக்(22), அபுபக்கர்(19), ஆகிய மூன்று பேரை தலையில் வெட்டிவிட்டு, தெருவோரம் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் பயந்து போன பெண்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

 



 

பதற்றமான சூழ்நிலை நிலவியதால் பதற்றத்தை தவிர்க்க பரங்கிமலை துணை ஆணையர், அடையார் துணை ஆணையர், மடிப்பாக்கம் உதவி ஆணையர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டனர். தலையில் வெட்டுக்காயத்துடன் மூவரையும் கிண்டி கத்திபாரா அருகில் உள்ள பாலாஜி மருத்துவமமையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர். இதில் நவீன் மற்றும் அபுபக்கர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஷபீக் மட்டும் மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 



 

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷபீக்கின் மருத்துவ கட்டணம் 19500 ரூபாய் கட்டிய நிலையில் மேலும் மருந்து செலவாக 6500 ரூபாய் கட்ட வேண்டும் என கூறியதால் அவரது உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர் பின்னர் கலைந்து சென்றனர். தப்பியோடிய நபர்கள் யார் என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் எதற்காக வந்தார்கள் எனவும் விசாரித்து வருகின்றனர். 



 

முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் மாலை கிண்டியில் பிரபல ரவுடி ஆதம்பாக்கம் ரவுடி ராபின் என்பவரின் உறவினர் அனில் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவரை ராபின் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்தார். அதற்கு பழிதீர்க்கும் விதமாக அனிலை கிண்டியில் வைத்து கடத்திச் சென்று ராபின் எங்கு என கேட்டு அடித்து விட்டு மீண்டும் வீட்டினருகே வந்து விட்டு விட்டு சென்றனர். இதன் நீட்சியாக நாகூர் மீரான் எப்போதும் இருந்த இடம் தான் ஆபிரகாம் தெரு அதனால் அங்கு சென்று தங்கள் பலத்தை நிரூபிக்க மிரட்டியிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக முதற்கட்டமாக ஐந்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது