கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய பண்டிகையான 50 ஓவர் உலகக்கோப்பை இன்று தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது.
சாதிப்பாரா ஷகிப்?
இந்த உலகக்கோப்பையானது 90ஸ் கிட்ஸ், 2 கே கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் கடைசி உலகக்கோப்பையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் வங்கதேச அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன் மிக முக்கிய வீரர் ஆவார்
வங்கதேச அணி சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணிகளையே அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்ததற்கு ஷகிப் அல் ஹசனின் பங்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர் இதுவரை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் வங்கதேச அணிக்காக 1146 ரன்களை குவித்துள்ளார். வங்கதேச வீரர் உலகக்கோப்பை போட்டியில் குவித்துள்ள அதிகபட்ச ரன்னும் இதுவாகும்.
லாரா, டிவிலியர்ஸ், கெயில்:
இந்த நிலையில், இந்த உலகக்கோப்பையில் ஷகிப் அல் ஹசனுக்கு லாரா, டிவிலியர்ஸ், ஜெயசூர்யா, காலீஸ் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அருமையாக உள்ளது. அதாவது, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் தற்போது 1146 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன் 9வது இடத்தில் உள்ளார்.
இவருக்கு முன்னால் பட்டியலில் பிரையன் லாரா 1225 ரன்களுடன் 4வது இடத்திலும், டிவிலியர்ஸ் 1207 ரன்களுடன் 5வது இடத்திலும், கெயில் 1186 ரன்களுடன் 6வது இடத்திலும், ஜெயசூர்யா 1165 ரன்களுடன் 7வது இடத்திலும், காலீஸ் 1148 ரன்களுடன் 8வது இடத்திலும் உள்ளனர். இந்த தொடரில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் லீக் போட்டியில் மோதுவதால் ஷகில் அல் ஹசன் 150 ரன்களுக்கு மேல் குவித்தாலே லாராவை முந்திவிடுவார்.
இதன்மூலம் அவர் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி விடுவார். உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 2278 ரன்களுடன் யாரும் நெருங்க முடியாதபடி முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் 1743 ரன்களுடன் உள்ளார். 3வது இடத்தில் குமார் சங்ககரா 1532 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். சங்ககராவின் சாதனையை ஷகிப் அல் ஹசன் முறியடிப்பதற்கும் வாய்ப்புகள் இருந்தாலும், லாராவின் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளது.
36 வயதான ஷகிப் அல் ஹசன் இதுவரை 240 ஒருநாள் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 55 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 384 ரன்களை எடுத்துள்ளார். 66 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 1 இரட்டை சதம், 31 அரைசதம் உள்பட 4 ஆயிரத்து 454 ரன்களை எடுத்துள்ளார். 117 டி20 போட்டிகளில் ஆடி 12 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 382 ரன்களை எடுத்துள்ளார்.
சிறந்த ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் 66 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 233 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 308 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 140 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த உலகக்கோப்பையில் ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகப்பெரிய தூணாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: ENG vs NZ World Cup 2023: தொடங்கியது உலகக் கோப்பை திருவிழா; இங்கிலாந்தை பழி தீர்க்குமா நியூசிலாந்து; டாஸ் வென்று பந்து வீச முடிவு
மேலும் படிக்க: ODI World Cup 2023: தொடங்குகிறது ஐசிசி உலகக் கோப்பை - போட்டியையே மாற்றும் திறன் கொண்ட அந்த 10 வீரர்கள் யார்?