மலையாள படம் புழு, ட்ரெயிலர் வந்தபோதே எல்லோரையும் ஏற்கெனவே கவனிக்க வைத்தது எதற்கென தெரியுமா? மம்மூட்டியும், பார்வதியும் இதில் முதல் முறையாக இணைவதால்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட களம், இரண்டு மகா நடிகர்களையும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே மொத்தமாக வாரி பயன்படுத்திக்கொண்டது.


அளவுக்கு மீறி சுத்தம் பார்த்து, மூச்சுமுட்டும் அளவுக்கு அத்துமீறி ஒழுங்கைப் பற்றி பேசும், OCD கொண்ட அப்பாவாக மம்மூட்டியும், அவரது மகன் கிச்சுவாக நடித்திருக்கும் வாசுதேவ் சஜீஷும் வாழும் மொன்னையான தினசரி வாழ்வை ரிப்பீட் மோடில் நமக்குக் காட்டுவதே, ஒரு தயார்படுத்தல்தான். எந்த விதமான விளக்கங்களுக்கும், கொசுவத்தி போட்ட ஃப்ளாஷ்பேக்குக்கும் போகாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போதே, முதல் பட இயக்குநரான ரத்தீனா வெற்றிபெற்றுவிடுகிறார். முதல் படமா என பிரமிக்கவும் வைக்கிறார்.



பார்த்த உடனே ’நீ இந்த ஆளா’ என யூகிக்கும் அசிங்கமான முகங்களை, வீடு தேடும் படலத்தில் அறிமுகப்படுத்தி ஆரம்பித்திருப்பதெல்லாம், இயக்குநரின் எக்கச்சக்க எக்ஸெல் புரிதல். ”Tomato-வ எப்படி பழம்னு சொல்லுவ, Google ஒரு Search என்ஜின்தான்” என்று சொல்லிவிட்டு 500 முறை எழுதச்சொல்லி Imposition கொடுக்கும்போதும் சரி, பாதகத்தை செய்து முடித்துவிட்டு, ”உன் அப்பா நல்லவன்தான்” என செண்டிமெண்ட் டயலாக் பேசும்போதும் சரி, மம்மூக்காவை ஏன் மக்கள் இப்படி கொண்டாடுகிறார்கள் என்பதன் அர்த்தம் மீண்டும் மீண்டும் புரியும்.


ஹர்ஷத், ஷர்ஃபு, சுஹாஸ் ஆகிய மூன்று பேரும் எழுதிய திரைக்கதை இது. உண்டாவை எழுதிய ஹர்ஷதும், வைரஸை எழுதிய ஷர்ஃபு, சுஹாஸும் இதில் மீண்டும் தாங்கள் யார் என்பதை நிரூபிக்கிறார்கள். வாகமான் மீட்டிங், பாதாள உலகத் தொழில் என சில குழப்பங்கள் தேங்க வைக்கிறது.



 


இஸ்லாமிய வெறுப்பு, ரத்த சுத்தி சிந்தனை என சமூகத்தின் மொத்த அழுக்குத்திமிரையும் நம் முகங்களின் மீது வீசுகிறார் இயக்குநர் ரத்தீனா. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக விடாமல் தொடரும் சாதியைக் கைவிடாமல், அதற்கு கொஞ்சம் HD Resolution மேக்கப்போட்டுவிட்டு, புன்னகையுடன் சுற்றிக்கொண்டிருக்கும் அண்ணன், அம்மா, அப்பா, மாமா, பெரியப்பா, ஒன்றுவிட்ட சித்தப்பாக்கள் என பலரின் முகம், உங்களுக்கு மம்மூட்டியின் கண்களில் தெரியலாம். ஒருவேளை கொஞ்சம் உற்றுப் பார்த்தால், அவரின் கண்களில் நீங்களும் தெரியக்கூடும். அமைதியாக, சாந்த ஸ்வரூபியாக தன்னைத்தானே காட்டிக்கொள்ளும் மனிதர்கள், சாதிய அகோரிகளாக இருப்பதைப் பார்க்கிறோம்தானே.


இப்போல்லாம் யாருங்க சாதியெல்லாம் பாக்குறா என்கிறீர்களா? இதை மாற்ற என்னால் என்ன செய்யமுடியும் என்கிறீர்களா? உங்களுக்கு புழு உதவலாம்.


பாவ(!)மன்னிப்பு கேள் என்று பேரம் பேசுவதற்கு புறப்பட்டுப்போகும் குட்டன், அருவருப்பிலும், பதற்றத்திலும் உங்களை நெளிய வைத்தால், நீங்களும் நானும் தோழர்களே..