கல்வியை அளிப்பது லாபம் ஈட்டும் தொழில் அல்ல என்றும், கல்விக்கான கட்டணம் நியாயமாக, எல்லோரும் செலுத்தக்கூடிய அடிப்படையிலும் இருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஆந்திர அரசுக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கும் தலா ரூ.2.5 லட்சம் அபராதத்தையும் உச்ச நீதிமன்றம் விதித்தது. 


ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கட்டணத் தொகையை ஆண்டுக்கு ரூ.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. இதுகுறித்து, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மாநில அரசு சார்பில், அரசாணை வெளியிடப்பட்டது. அதில், 2017 - 2020 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.24 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்தது.


எனினும், அரசின் இந்த உத்தரவை ஆந்திர உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. அரசு உத்தரவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சுதான்ஷூ துலியா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 


அப்போது பேசிய நீதிபதிகள், ''மருத்துவக் கட்டணத்துக்குத் தற்போது அரசு நிர்ணயித்துள்ள தொகையானது, முன்பு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 7 மடங்கு அதிகம். இது, எந்த வகையிலும் சரியல்ல. கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான தொழில் அல்ல.  கல்விக்கான கட்டணம் நியாயமாக, எல்லோரும் செலுத்தக்கூடிய அடிப்படையிலும் இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர். 


இதைத் தொடர்ந்து ஆந்திர அரசுக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கும் தலா ரூ.2.5 லட்சம் அபராதத்தை உச்ச நீதிமன்றம் விதித்தது. இந்தத் தொகை உச்ச நீதிமன்றத்தின் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) மற்றும் மத்தியஸ்த மற்றும் சமரச திட்டக் குழு (MCPC) ஆகியவற்றுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 






கட்டண நிர்ணயம்


* கல்வி நிறுவனம் அமைந்திருக்கும் இடம்
* தொழில்முறைப் படிப்பின் இயல்பு
* நிறுவனக் கட்டமைப்புகளுக்கான செலவு
* நிர்வாகம் மற்றும் பராமரிக்கு ஆகும் தொகை
* கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பணம்
* இட ஒதுக்கீட்டின் கீழ் கட்டண சலுகைக்கு ஆகும் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே, மருத்துவக் கல்லூரிகள் சார்பில் மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.