அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
’’2023 - 24 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும்.
மின்னஞ்சல்
இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்க தக்க வழிகாட்டிட அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்குதல் குறித்த விளக்கக் காணொளி லிங்க் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு மின்னஞ்சல் தொடங்க கற்பிக்கும் போது பின்வரும் கூடுதல் விவரங்களையும் வழங்குதல் வேண்டும்.
மாணவர்களுக்கு புதிதாக தொடங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியினை EMIS மாணவர் தகவல் பதிவேட்டில் பதிவு செய்திடல் வேண்டும்.
மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மின்னஞ்சலை உருவாக்கிய பின் மாணவர்கள் மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது, மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும்.
அவ்வாறு உருவாக்கப்படும் மின்னஞ்சலின் கடவுச்சொல்லை (PASS WORD) மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். மற்றவர்களுக்கு பகிரக் கூடாது. இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலைத் தவிர்க்கலாம். இந்த விவரங்களை மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள்
வழிகாட்டிடல் வேண்டும்.
ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து cgtnss@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு நான் புதிய மின்னஞ்சல் முகவரியினை பெற்றேன் என்றும் உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கின்றது என்கின்ற விவரத்தினை மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்டுதல் வேண்டும்.
இதை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜூலை 30ஆம் தேதி வரை ஹை-டெக் லேப் கணினிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
டயட் Faculties என்று அழைக்கப்படும் மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம்
இச்செயல்பாடு குறித்த தகவல்களை கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.