தன்னை அவதூறாக பேசியதாக நடிகை விந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். இவர் திமுகவில் கொள்கைப் பரப்பு துணை செயலாளராகவும், விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் செய்தி தொடர்பாளர் பொறுப்புகளையும் வகிக்கிறார். அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவது குமரனுக்கு வழக்கம். அப்படித்தான் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி., ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகனிடம் மன்னிப்பு கேட்டதால் கட்சியில் சேர்க்கப்பட்டார். உட்கட்சி மட்டுமின்றி எதிர்கட்சியான அதிமுகவை கடுமையாக குமரன் விமர்சிப்பது வழக்கம். அப்படி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார் குறித்து பேசி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் யாரையாவது விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
குமரன் யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதிலும் தொடர்ந்து விமர்சன வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இதனால் கடுப்பான வேலூர் மாவட்ட அதிமுகவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். ஆனால் குமரன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் இன்னும் எத்தனை புகார் வேண்டுமானாலும் என்மீது கொடுக்கப்படும். நான் இன்னும் பேசுவேன்’ என தெரிவித்திருந்தார்.
இப்படியான நிலையில் குமரன் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் தன்னை அவதூறாக பேசியதாக நடிகை விந்தியா தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இதனையடுத்து குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.