அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல்.




அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளில் தான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று கூறியிருந்த நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள மத்திய அரசின் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. 




மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் (2001-06) வீட்டுவசதி வாரியத்துறையின் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4,90,29,040  அளவுக்கு சொத்து சேர்த்ததாக அனிதாராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா  மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின்  பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. 




அனிதா மீதான வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு அரசில் தற்போது அமைச்சராக இருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். அவர்மீதான வழக்கை நடத்தவேண்டியது மாநில அரசுதான். ஆனால், அனிதாவின் நலன்களைக் காப்பதில்தான் மாநில அரசு அக்கறையோடு செயல்படுகிறது. இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும். எனவே, நீதிமன்ற சட்டப்பிரிவு 301 (2), 302 ஆகிய சட்டப்பிரிவுகளின்கீழ் இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறையை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அமலாக்கத்துறையின் வாதத்தை லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கவில்லை. கிட்டத்தட்ட 90 சதவீதம் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையுள்ளதாகவும் அமலாக்கத்துறையின் உதவி வேண்டாம் என வாதம் வைத்ததாக கூறப்படுகிறது.





இந்நிலையில் அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, அமலாக்கதுறையிடம் இருக்கும் ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்பித்து இருக்கின்றதாகவும் அதனடிப்படையில் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும் எனவும் கூறியுள்ளனர். அமலாக்கத்துறை வசமிருக்கும் ஆதாரங்களை அவ்வளவு எளிதாக நீதிமன்றத்தாலும் புறம்தள்ள முடியாது, விசாரணை செய்துதான் ஆக வேண்டும்  என்கின்றனர் மூத்த வழக்கறிஞர்கள்.




இந்நிலையில் தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தம், மூத்த மகன் ஆனந்த பத்மநாபன் ஆகியோர் ஆஜராகவில்லை. இளைய மகன்கள் ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன் மட்டும் ஆஜராகினர். இவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். விசாரணையின் நிறைவில், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.