Just In





ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் திராவிட மாடல் அரசு.. என்றும் உறுதுணையாய் இருப்போம்: உதயநிதி உறுதி
ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் திராவிட மாடல் அரசு.. என்றும் உறுதுணையாய் இருப்போம்: உதயநிதி உறுதி

சமக்ர சிக்ஷா ஊதிய விவகாரத்தில் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு திராவிட மாடல் அரசு மதிப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமக்ர சிக்ஷா எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்கும் ஆசிரியர்களின் ஊதியத்துக்கும் மத்திய அரசு நிதி தருகிறது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
செப்டம்பர் மாத ஊதியம் நிலுவை
இதனால் தமிழ்நாடு அரசு அக்டோபர் மாதத்துக்கான ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியத்தைத் தரவில்லை. இதற்குக் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த நிலையில் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு திராவிட மாடல் அரசு மதிப்பளிக்கும் என்றும் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 27 அன்று பிரதமர் மோடியைச் சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் வலியுறுத்தினார். ஆனாலும், ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் பெறப்படவில்லை. நமது திராவிட மாடல் அரசு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
32,500 பேருக்கும் செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிக்க நடவடிக்கை
ஒன்றிய அரசின் நிதி பெறப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆவன செய்யப்படும்.
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நம் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாய் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’.
இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.