தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அக்டோபர் 21ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
2025ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது திங்கள் கிழமை அன்று வருகிறது. முன்னதாக அக்டோபர் 18 சனிக் கிழமை, 19 ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்கள் வார விடுமுறை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பொதுவாக இரவில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்படும் என்பதால், அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அக்டோபர் 20 தீபாவளி பண்டிகை
இதுகுறித்து தமிழக உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் கூறும்போது, அக். 18 மற்றும் 19ஆம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறையாகும். அக். 20 திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை ஆகும்.
பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், அக். 21 அன்று பொதுப் போக்குவரத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே போல், பள்ளிகளில், கல்லூரிகளில் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் போது போக்குவரத்து சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும்.
போக்குவரத்து சிக்கல்கள், கல்வி நடவடிக்கைகள்
அக். 21 தேதி விடுமுறை வழங்கப்படும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாக பண்டிகையை அனுபவிக்க முடியும். பொதுப் போக்குவரத்து சிக்கல்கள் குறைவாக இருக்கும். இதனால் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகள் ஒழுங்காக தொடரவும், மாணவர்கள் திருப்தியாகவும் இருக்க முடியும்.
அதே நேரத்தில் அரசு அதிகாரிகள், மக்களின் பாதுகாப்பும், போக்குவரத்து வசதியும், கல்வி முறையும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முந்தைய காலங்களில் பொது மக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விடுமுறை அளித்ததைப் போல, இந்த முறையும் விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.