தீபாவளி பண்டிகைய முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மட்டும் 1,28,275 பயணிகள் பயணித்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தெரிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு பேருந்துகள்:
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது, இதற்காக ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ரயில்களில் தீபாவளிக்கான முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது, சிறப்பு ரயில்கள் அறிவித்திருந்தாலும் அதிலும் இடம் கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.
ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 16/10/2025 17/10/2025 18/10/2020 மற்றும் 19/10/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2092 பேருந்துகளுடன், 5.000 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்களும் சேர்த்து 14,268 பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6110 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 20378 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஒரே நாளில் 1,28.275 பயணம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், 2025-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம், நேற்று (16.10.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும், 761 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு ஆக மொத்தம் 2,853 பேருந்துகளில் 1,28,275 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், இதுவரை 1,36,413 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு:
நேற்று சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் 2025-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, பாதுகாப்பாகப் பயணம் செய்வதை உறுதிசெய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் முக ஸ்டாலின், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை, இன்று (16.10.2025) சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் இயக்கத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். சிறப்புப் பேருந்துகள் இயக்கம், பயணிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். திராவிட மாடல் அரசு, மக்களின் மகிழ்ச்சியான பயணத்திற்கு என்றும் துணைநிற்கும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.