தமிழ்நாட்டில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் டிப்ளமோ எனப்படும் பட்டயப் படிப்புகளுக்கு சுமார் 19 ஆயிரம் இடங்கள் உள்ளன.

  


பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை


இந்த பல்வகை தொழில்நுட்பக்‌ (பாலிடெக்னிக்) கல்லூரியில் பட்டயப் படிப்பு மாணவர்கள்‌ சேர்க்கை குறித்து தொழில்‌நுட்பக்‌ கல்வி இயக்ககம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 


இதன்படி, தமிழ்நாடு அரசு அனைத்து பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கவும்‌, இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேரப் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மே 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு இணைய வழியில் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், இன்றே விண்ணப்பிக்கக் கடைசி நாளாக இருந்தது.


எனினும் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 31ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தொழில்நுட்ப இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டை விட இந்த முறை விண்ணப்பப் பதிவு அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பிப்பது எப்படி?


பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவுசெய்ய வேண்டும்‌. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌ மாவட்ட சேவை மையங்கள்‌ (TNEA Facilitation Centre) மூலம்‌ விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.


இந்த மையங்களின்‌ பட்டியல்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.


பதிவுக்கட்டணம்‌ 


பதிவுக்‌ கட்டணமான ரூ.150/-ஐ விண்ணப்பதாரர்‌ Debit Card  / Credit Card / Net Banking ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின்மூலம் இணையதள வாயிலாகச் செலுத்த வேண்டும்‌. எனினும் எஸ்சி/ எஸ்டி பிரிவினர்‌ பதிவுக்‌ கட்டணம்‌ செலுத்த வேண்டிய அவசியமில்லை.


மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து தகவல்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ தொலைபேசி எண்களை மாணவர்கள்‌ https://www.tnpoly.in/ என்ற இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌ என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.


எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் என்பதை அறிந்துகொள்ள https://www.tnpoly.in/public/docs/Colleges-and-Branches_2.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


பாலிடெக்னிக் படிப்புகள் குறித்த விளக்கக் கையேட்டை முழுமையாகக் காண: https://www.tnpoly.in/public/docs/TNPA-2024-2025.pdf


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpoly.in/


இதையும் வாசிக்கலாம்: TN School Reopen: தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6 பள்ளிகள் திறப்பு- வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு