அம்மைநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல்நாள் பள்ளியில் சேர்ந்த முதல் மாணவிக்கு மாலை அணிவித்து கிரீடம் வைத்து தேச தலைவர்களுடைய வேடம் அணிந்து உற்சாகத்துடன் வரவேற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது படிப்படியாக சரிந்து வந்தது. சுற்றுவட்டார பகுதியில் இருந்த குழந்தைகளை தனியார் பள்ளியில் பெற்றோர்கள் சேர்த்து வந்தனர். இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு முதல்நாள் சேர்க்கை துவங்கியது. அரசு பள்ளியில் புதிய மாணவ, மாணவிகள் சேர்க்கையில் அதிகளவில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியில் சேர்ந்தனர். இதில் முதலில் சேர்ந்த ருத்ர ஸ்ரீ என்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாலை அணிவித்து கிரீடம் வைத்து தேச தலைவர்களுடைய வேடம் அணிந்து புதிய மாணவ மாணவிகளை முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கைதட்டி உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.
அதனைத் தொடர்ந்து 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, அரசு பள்ளியில் வழங்கப்படும் இலவச பாடபுத்தகம், பேக் சீருடை ஆகியவை வழங்கி வரவேற்றனர், இதனை அடுத்து புதிதாக சேர்க்கப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் வைத்து முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்த பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . மேலும் வந்திருக்கும் அனைத்து பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், “இந்த பகுதியின் புகழ் பெற்ற அரசு பள்ளியாக உள்ள அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மரங்கள் சூழ்ந்த இயற்கைச் சூழல் காற்றோட்டமான வசதி மற்றும் அனைத்து பாடவாரியான வகுப்புகளுக்கு தனித்தனி ஆசிரியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி அனைத்து வகுப்புகளுக்கும் நவீன முறையில் அகன்ற டிவி மூலம் கல்வி கற்றுத்தரும் நவீன வசதி மற்றும் ஒழுக்கம், கல்வித்தரம் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் சுமார் 10-கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நாங்கள் இப்பள்ளியை தேடி தேர்வு செய்து சேர்த்து வருகிறோம்” என்று மிகவும் பெருமையாக கூறினார்.