பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாணவர்களை கவரும் வகையில், சொந்த செலவில் மின்னொலியில் கணித ஆய்வகம், கட்டிடங்களுக்கு மேற்கூரை, ஐந்து லட்சத்தில் நவீன மாதிரி கழிப்பறைகள் அமைத்து பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தலைமை ஆசிரியர்.

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சியில் பழங்குடியின சமூக மக்கள் மட்டுமே வசிக்கும் போதகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், ஆறு ஆசிரியர்கள், இரண்டு பகுதி நேர ஆசிரியர்கள் என எட்டு பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 127 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தலைமையாசிரியர் இல்லாததால், பொறுப்பு தலைமை ஆசிரியராக கணித பட்டதாரி ஆசிரியர் பாரதி பணியாற்றி வருகிறார்.



 

இந்த பள்ளியில் முழுவதும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்ற பள்ளி என்பதால், ஆசிரியர் பாரதி பணியில் சேர்ந்த நாள் முதல் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என எண்ணி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு இடைநிற்றல் இல்லாமல் வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக பள்ளி வளாகத்தை, வகுப்பறைகளை, மாணவர்களை கவரும் வகையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து அறிவியல் ஆய்வகங்கள் இருப்பதைப் போல, கணித ஆய்வகம் ஒன்று உருவாக்க வேண்டும் என எண்ணி ஒரு அறை முழுவதும் தனது சொந்த செலவில் பல்வேறு வண்ணங்களில்,  கணித வாய்ப்பாடுகள், சூத்திரங்கள், கணிதவியலாளர்கள் படம் வரைந்து, அவர்களின் தத்துவங்களையும் சுவர் முழுவதும் எழுதி வைத்துள்ளார். மேலும் மாணவர்களை கணிதம் குறித்து சார்ட் மற்றும் கற்றல் உபகரணங்களை தயார் செய்ய வைத்து, அதனை வகுப்பறைகள் முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தால், அவர்கள் வகுப்பறை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தை கூராந்து கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் வகுப்பறை முழுவதும், ஒவ்வொரு சூத்திரங்கள், அட்டவணைகள், வாய்ப்பாடுகள் போன்ற அனைத்துக்கும் ஒவ்வொரு விதமான மின்விளக்குகளை பொருத்தி, மாணவர்களை கவரும் வகையில் அமைத்துள்ளார்.



 

இதனால் வகுப்பறைக்குள் நுழைகின்ற மாணவர்கள் பாடத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில், மிகுந்த ஆர்வத்தோடு இருந்து வருகின்றனர். அதேபோல் மற்ற வகுப்பு மாணவர்கள் கூட, இந்த வகுப்பறைக்குள் வர வேண்டும், அமர வேண்டும், படிக்க வேண்டும் என்று எண்ணம் உருவாகி ஆர்வத்தோடு வகுப்பறைக்குள் வந்து, கண்காட்சிகளை போல் பார்த்துவிட்டு செல்கின்றனர். அதேபோல் மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அமர்ந்திருந்தால் கூட, பள்ளி கட்டிடத்தை பார்க்கின்ற பொழுது அதில் அவர்களுக்கு பயனுள்ள வகையில் வாய்ப்பாடுகள், சூத்திரங்கள் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே மாணவர்கள் அமர்ந்து படிக்கவும், மதிய உணவு உண்ணும் வகையில் இரண்டு கட்டிடங்களையும் இணைத்து மேற்கூறையை அமைத்துக் கொடுத்துள்ளார். இதனால் மழை, வெயில், எந்த நேரங்களிலும் மாணவர்கள் அமர்ந்து படிப்பதும், உணவு அருந்துவதற்கும் வசதியாக இருந்து வருகிறது. அதேபோல் பள்ளியில் கழிவறை ஒன்று மட்டுமே இருப்பதால், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் நிலை இருந்து வந்த நிலையில், கூடுதலாக கழிப்பறை வேண்டும் என அரசுக்கு கோப்புகளை அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் அரசு வழங்குவதற்குள் தனது சொந்த பணத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறையை கட்டி, குழந்தைகள் தினத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையில் ஓவியங்களை வரைந்தும், சோப்பு, சீப்பு, பவுடர், ஹேண்ட் வாஷ் கிரீம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களையும் வைத்து, மாணவர்களை அதை பயன்படுத்தும் பழக்கப்படுத்தி உள்ளார். மேலும் இந்த கழிப்பறைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காக தனியாக பணியாளரை வைத்து தனது சொந்த செலவில் மாதம் ஊதியம் கொடுத்து வருகிறார். 




 

இதனால் கழிவறைக்கு செல்லுகின்ற மாணவர்கள் கழிவறையின், அழகை உள்ளே நின்று நீண்ட நேரம் ரசிப்பதும், கழிவறை விட்டு வெளியே வருவதற்கு மனமில்லாமல், மாணவர்கள் இருந்து வருகின்றனர். மேலும் தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளியின் தரத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக, தனது சொந்த செலவில் ரூ.40 மதிப்பில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சீருடை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் ஆசிரியர் செயல்பாடுகளை கண்டு அங்குள்ள பழங்குடியின மக்கள் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு சேர்த்துள்ளனர். சுமார் 30க்கும் மேற்பட்ட பிள்ளைகள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு வந்து சேர்ந்து படித்து வருகின்றனர்.

 

மேலும் மாணவர்கள் யாரேனும் பள்ளிக்கு வரவில்லை என்றால், வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் பேசுவது, உடல்நிலை சரியில்லாத மாணவர்களை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை சொந்த செலவில் கொடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகிறார். அதில்லாமல் அது மட்டும் இல்லாமல், இங்கு இருந்து படித்து விட்டு வெளியில் செல்கின்ற மாணவர்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும், அவர்கள் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக, தானே நல்ல கல்லூரியில், நல்ல பாடப்பிரிவில் சேர்த்து, கட்டணம் செலுத்துவது என மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவதற்காக பணியாற்றி வருகிறார். இந்த பாரதி ஆசிரியர் போதைகாடு பள்ளிக்கு  வந்ததிலிருந்து மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது,  பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த பள்ளி உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



 

மேலும் இந்த பள்ளியை விட்டு ஆசிரியரும் இடமாறக்கூடாது, மாணவர்களும் 12-ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் பாரதி ஆசிரியருடனே படிக்க வேண்டும் என்ற நோக்கில், எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளியை பனிரெண்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தி கொடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எத்தனையோ ஆசிரியர்கள் அரசு கொடுக்கின்ற அதிகப்படியான மாத ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு, கடமைக்கு பணி செய்து வருகின்ற நிலையில், அரசு தேவைக்கு அதிகமாக மாத ஊதியம் கொடுக்கிறது,  அந்த ஊதியத்தில் மாணவர்களின் வாழ்க்கை  தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில், இந்த பாரதி ஆசிரியர் சொந்த செலவில் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து, பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பாடுபடுவது வியக்கத்தக்க வகையில் உள்ளது.