PM Modi COP28: காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை 2033ம் ஆண்டு இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
COP28 மாநாட்டில் பிரதமர் மோடி:
துபாயில் நடைபெறும் சர்வதேச காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசும் மரியாதை, மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து பேசிய அவர் “உலகளாவிய உமிழ்வைக் கடுமையாகக் குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று, உலகத்தின் முன் சூழலியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான சமநிலையின் ஒரு சிறந்த உதாரணத்தை இந்தியா முன்வைத்துள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை உலக மக்கள்தொகையில் 17 சதவிகிதம், ஆனால் உலகளாவிய கார்பன் உமிழ்வில் இந்தியா 4 சதவிகிதம் மட்டுமே பங்களிக்கிறது. தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பின் (NDC) இலக்குகளை அடைவதில் நாங்கள் வேகமாக முன்னேறி வருகிறோம். உண்மையில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைந்துவிட்டோம். NDC இலக்குகளை அடையும் பாதையில் இருக்கும் உலகின் சில பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவின் இலக்கு:
கடந்த நூற்றாண்டின் தவறுகளைத் திருத்துவதற்கு நமக்கு அதிக நேரம் இல்லை. மேலும் ஒவ்வொரு நாடும் தங்கள் NDC இலக்குகளை அடைய நேர்மையாக உழைக்க வேண்டும். என்னால் எழுப்பப்பட்ட காலநிலை நீதி, காலநிலை நிதி மற்றும் பசுமைக் கடன் போன்ற பிரச்சினைகளுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். உலகத் தலைவர்களின் இந்த கூட்டு முயற்சியால், உலக நலனுக்காக, அனைவரின் நலன்களையும் பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் உமிழ்வு தீவிரத்தை 45 சதவிகிதம் குறைக்கவும், புதைபடிவமற்ற எரிபொருட்களின் பங்கை 50 சதவிகிதமாக அதிகரிக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2070க்குள் நிகர பூஜ்ஜியத்தை நோக்கி நாங்கள் தொடர்ந்து முன்னேறுகிறோம். காலநிலை மாற்ற செயல்முறைக்கான ஐ.நா. கட்டமைப்பிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. அதனால், 2028 இல் இந்தியாவில் COP33 உச்சிமாநாட்டை நடத்த முன்மொழிகிறேன்” என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, பசுமைக் கடன் முன்முயற்சியையும் முன்மொழிந்தார். இது மக்களின் பங்களிப்பு மூலம் கார்பன் மூழ்கிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என பிரதமர் மோடி கூறினார்.