தருமபுரியில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி எழுத்துக்களை பிம்பம் வாயிலாக பார்க்கும் வகையில் எழுதி பழகி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி மாணவி.
விடுமுறை, ஓய்வு நேரங்கள் என்றாலே விளையாட்டு, பொழுதுபோக்கு, டிவி, செல்போன், இணையதளம் என நேரத்தை வீணடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், தருமபுரி அரசு ஔவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சத்தியவாணி, பள்ளி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியவுடன், விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கு தனது ஆசிரியரிடம் ஆலோசனையை கேட்டுள்ளார். அப்பொழுது ஆசிரியர் திருக்குறள், சங்ககால பாடல்கள் உள்ளேற்றவற்றை படித்தும் எழுதி பார்க்க அறிவுறுத்தி உள்ளார்.
அப்பொழுது படிப்பதையும் எழுதுவதையும் வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்த சத்தியவாணி, திருக்குறளை இடமிருந்து வளமாக எழுதாமல், வலம் இருந்து இடமாக எழுதி பிம்பம் வாயிலாக பார்க்கும் வகையில் எழுதியுள்ளார். இதனை மூன்று நாட்களில் 1330 திருக்குறள்களையும் எழுதி முடித்து உள்ளார். இதனை தொடர்ந்து சங்க கால நூல்கள் நாலடியாரில் உள்ள 400 பாடல்களை, இரண்டு நாட்களில் எழுதி முடித்துள்ளார். இதனால் மேலும் ஆர்வமடைந்த சத்தியவாணி, மூதுரையில் உள்ள 30 பாடல்கள், கொன்றை வேந்தன் 91 பாடல்கள், ஆத்திச்சூடி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என சங்க கால நூல்களில் உள்ள பாடல்களையும் வலமிருந்து இடமாக எழுதி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த எழுத்துக்கள் பிம்பம் வாயிலாக பார்க்கும் பொழுது சரியாக தெரியும். கோடை விடுமுறை முழுவதையும், எழுத்துக்களை பிம்பம் வாயிலாக பார்க்கும் வகையில், வலமிருந்து இடமாக எழுதி முடித்துள்ளார். சுமார் நான்கு நோட்டுகளுக்கு மேல் இது போன்ற பாடல்களை எழுதி முடித்துள்ளார். இந்த மாணவி வலம் இருந்து இடமாக பாடல்களை எழுதியதை கண்டு ஆசிரியர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்து, மாணவியை பாராட்டினர். மேலும் நாளடைவில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மொழியையும், தமிழ் பாடல்களையும் கற்பதற்கான ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இது போன்ற வலம் இருந்து இடமாக எழுதும் பட்சத்தில் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்க முடியும். இதனால் தமிழ் பாடல்களின் மீது அவர்களுக்கு ஆர்வமும் அதிகரிக்கும் என சத்தியவாணி தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு வகையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கும் அரசு பள்ளி மாணவி சத்தியவாணி, கடந்த ஆண்டு 750 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து இன்சாட் ஏவுகனையை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பினர். இதனை தயாரிப்பதற்கு தருமபுரி அரசு ஔவையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பங்கும் இடம்பெற்றுள்ளது. அதில் சத்தியவாணியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை பாராட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் நேரில் அழைத்து இன்சாட் ஏவுகணை உருவாக்கம் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது விழா மேடையில் ஆளுநர் முன்னிலையில் இன்சாட் ஏவுகணையை உருவாக்கியது குறித்து ஆங்கிலத்தில் மிகவும் அழகாக மாணவி எடுத்துரைத்து ஆளுநரிடம் பாராட்டை பெற்றுள்ளார்.
அரசு பள்ளி மாணவர்கள் என்றால் தங்களது தனித்திறமைகளில் அதிக கவனம் செலுத்தாமல், இருப்பார்கள் என்ற நிலையை மாற்றும் வகையில், அரசு பள்ளி மாணவர்களாலும், குறிப்பாக மாணவிகளால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்பது என்பதற்கு இந்த சத்தியவாணி என்ற அரசு பள்ளி மாணவி ஓர் உதாரணம்.