புதிய கல்விக் கொள்கையை நிறுவுவது தொடர்பாக தேசிய பல்கலைக்கழகங்கள் தற்போது முடிவு செய்து வருகின்றன. இந்த வரிசையில் டெல்லி பல்கலைக்கழகம் 2022-23 ஆண்டு முதல் புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்த முடிவெடுத்துள்ளது. இதற்கிடையே முக்கிய எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளை பாடத்திட்டத்திலிருந்து டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழ் தலித் எழுத்தாளர்கள் இருவரது படைப்புகளும் அடக்கம்.
வரும் கல்வியாண்டிலிருந்து புதிய கல்விக் கொள்கையை டெல்லி பல்கலைக்கழகம் அமல்படுத்த உள்ள நிலையில் எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் புகழ்பெற்ற படைப்பான திரௌபதியை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. திரௌபதி கதை பழங்குடிப் பெண்களைப் பற்றியது. இது தவிர விளிம்புநிலை மக்களுக்கான எழுத்தாளர்களான சுகிர்தராணியின் ’கைம்மாறு’ ,’என் உடல்’ ஆகிய படைப்புகளும் பாமாவின் ’சங்கதி’ படைப்பும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படைப்புகளுமே டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப்பாடத்தில் இடம்பெற்றிருந்தன. பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகளுக்குப் பதிலாக ரமாபாய் என்னும் எழுத்தாளரின் படைப்பை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளனர். நீக்கப்பட்டது தொடர்பாக எந்தவித அடிப்படைக் காரணங்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறவில்லை.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள் சிலர் இந்தப் பாடத்திட்ட மாற்ற முடிவுக்கு எதிராக நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பியுள்ளனர் அதில், ‘பாடத்திட்டத்தை மேற்பார்வையிடும் குழுவில் தலித் மற்றும் பழங்குடிச் சமூகம் சார்பாக எந்த உறுப்பினர்களும் இல்லை.ஏற்கெனவே குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் தலித், பழங்குடிகள் மற்றும் பாலின சிறுபான்மையினர்களுக்கு எதிரான பிற்போக்குவாத மனநிலை கொண்டவர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு இதுவரை எந்தவித பதிலும் தரவில்லை.
இதற்கிடையே இதுபற்றி கவிஞர் எழுத்தாளர் சுகிர்தராணியிடம் பேசினோம், ’‘என்னுடைய படைப்பும் பாமாவின் படைப்பும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இந்த தாக்கம் அவர்களை அச்சப்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான் நீக்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்டது தொடர்பாக எங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், இதில் எனக்கு ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமூக எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்ந்து பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்தால்தான் அதிசயம். மத்திய அரசு மதச்சார்பற்ற அரசு இல்லை, அது இந்துத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் அரசு. இந்துத்துவம் இந்து சமயம் இரண்டுக்குமே பெண்களைப் பற்றிய ஒரு பார்வை உள்ளது. இதுதான் மத்திய அரசின் பார்வையும். அதிலும் நானும் பாமாவும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் குரலாகத்தான் எங்களது படைப்புகளை முன்வைத்து வருகிறோம்.எங்கள் படைப்புகள் தற்போது நீக்கப்பட்டது எங்கள் குரல் ஒடுக்கப்படுவதாகத்தான் பார்க்கிறோம்.பெண்களின் குரல் வெளியே வரக்கூடாது அதிலும் குறிப்பாக விளிம்புநிலைப் பெண்களின் குரல் நசுக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கமாக நாங்கள் பார்க்கிறோம்’ எனக் கூறினார்.
இதற்கிடையே எழுத்தாளர்கள் இருவரது படைப்புகள் நீக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.