2021ஆம் ஆண்டின் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் ‘சிறந்த நடிகை’ விருது பெற்றும், ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடர் வெற்றிக்குப் பிறகு பல தரப்பினரிடையே பாராட்டும் பெற்று, இந்த ஆண்டைச் சிறந்த ஒன்றாக மாற்றியிருக்கிறார் சமந்தா. பெரிய வெற்றிகளையும், கடும் உழைப்பையும் தொடர்ச்சியாகக் கொட்டி வரும் சமந்தா தற்போது ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு விடுப்பு தேவைப்படுவதாகவும், தன்னைத் தானே கவனித்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் சினிமா இணைய தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "எனக்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு விடுப்பு தேவைப்படுகிறது. கடுமையான பணிகளுக்குப் பிறகு, நான் தற்போது சோர்வாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார் சமந்தா. தனது திரைப் பயணத்தைத் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது வரை நீண்ட விடுப்பு எதையும் சமந்தா எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமந்தா, “அடுத்த ப்ராஜெக்ட்டில் கமிட் ஆவதற்கு முன்பே, என்னை நானே கவனித்துக் கொள்ளப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



தனது விடுமுறையைக் கழிக்க சமந்தா எங்கு செல்லப் போகிறார் என்று கேள்வி எழுப்பிய போது, அவர் “எங்கு செல்லப் போகிறேன் என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. எனினும், விடுமுறையை மட்டும் உறுதியாகத் தீர்மானித்துள்ளேன்.” என்று கூறுகிறார். 34 வயதான சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அக்கினேனியைக் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 


கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெளியானது. சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்ற இந்தத் தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு, சமந்தா ‘சகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தெலுங்கு மொழியில் புராணக் கதையாக உருவாகும் ‘சகுந்தலம்’ படத்திற்காக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சமந்தா, அதற்கு அடுத்ததாக, பாண்டிச்சேரியில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்தப் படத்தில் அவர் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடித்துள்ளார். இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் ஹைதராபாத்திற்குத் திரும்பியுள்ள சமந்தா அடுத்தடுத்த படப்பிடிப்புகளிலும், விளம்பர ப்ரொமோஷன்களிலும் கலந்துகொண்டுள்ளார்.



'தி ஃபேமிலி மேன் 2’ மீதான சர்ச்சைகளைக் குறித்தும் பேசியுள்ள சமந்தா அந்த சீரிஸின் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். “தொடர் வெளியான பிறகு, எதிர்ப்புகள் குறைந்தது எனக்கு மகிழ்வை அளித்தது. எனினும், இன்னும் மனதில் கோபம் கொண்டிருப்பவர்களிடம் நான் மன்னிப்பைக் கோருகிறேன்” என்று இந்த சர்ச்சை குறித்து கூறியுள்ளார் சமந்தா.