அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் நாடு வளராது என்று தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சில பள்ளிகளைத் தவிர நாடு முழுவதிலும் உள்ள பிற அரசுப் பள்ளிகள் பரிதாபமாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5ஆம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று, திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலாளர், அமைச்சர்கள் பங்கேற்பு
டெல்லி முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
டெல்லியில் உள்ளதைப் போன்ற 15 மாதிரிப் பள்ளிகள் மற்றும் 26 தகைசால் பள்ளிகளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
''நம்முடைய நாட்டில் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். இதில் 18 கோடி மாணவர்கள் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். நாடு முழுவதுமே அரசுப் பள்ளிகள் இருக்கும் நிலையை நாம் அறிவோம். சில பள்ளிகளைத் தவிர பிற அரசுப் பள்ளிகள் பரிதாபமாக உள்ளன. நம்முடைய நாடு தலைசிறந்த நாடாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வளர்ச்சி அடைந்த நாடாகவும் மாற வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆனால் நம்முடைய 66 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தரம் குறைந்த கல்வியை பெற்று வரும் சூழலில், நம் நாடு எப்படி வளரும்? அரசுப் பள்ளிகளில் தலைசிறந்த கல்வியைத் தரும் வரையில், வல்லரசு நாடாக மாறும் நம்முடைய கனவு, கனவாக மட்டுமே இருக்கும். நனவாக மாறாது.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால் நாடு வளராது. பெண் கல்வியை மேம்படுத்தும் புதுமைப் பெண் திட்டம், ஒரு புரட்சிகரமான திட்டம் ஆகும். இந்தியா முழுவதுமே புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.’’
இவ்வாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்
இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்தனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு, புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 உயர் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.