அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் நிலவுவதாகக் குரல்கள் எழுந்த நிலையில், பள்ளிகளில் ஜூலை 29ஆம் தேதி முதல் சீருடைகளை அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Continues below advertisement


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உண்ண உணவு, உடுத்த சீருடை, காலணிகள், கால் உறைகள், எழுத பேனா, பென்சில்கள், கிரேயான்கள், பயணிக்க மிதிவண்டி உள்ளிட்ட பல பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன.


விலையில்லா சீருடை முறையாக வழங்கப்படவில்லை


இந்த நிலையில், 2024- 25ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை முறையாக வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது.  இந்த நிலையில் ஜூலை 29 முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துப் பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’2024-2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரை சத்துணவு உண்ணும்‌ மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும்‌ பொருட்டு, மாவட்டங்களில்‌ செயல்படும்‌ மகளிர்‌ தையல்‌ தொழில்‌ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்‌ மூலம்‌ தொடர்புடைய பள்ளிகளுக்கு நேரில்‌ சென்று அளவெடுக்கும்‌ பணி சமூக நலத்‌ துறையால்‌ மேற்கொள்ளப்பட்டது.


எமிஸ் செயலியில் பதிவேற்றம்


எடுக்கப்பட்ட அளவுகள்‌ கல்வி மேலாண்மை தகவல்‌ அமைப்பின்‌ (எமிஸ்) மூலம்‌ உருவாக்கப்பட்ட மொபைல்‌ செயலியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டு உள்ளன. 


இவற்றின்‌ அடிப்படையில்‌ மாணவ/ மாணவிகளுக்கு எடுக்கப்பட்ட அளவுகளைக்‌ கொண்டு சீருடைகள்‌ தைக்கும்‌ பணி முடிந்து மாணவ/ மாணவிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள்‌ 29.07.2024 முதல்‌ தொடங்க உள்ளது.


மாணவ/ மாணவிகளுக்கு வழங்கப்படும்‌ சீருடைகளில்‌ அளவு எண்கள்‌ தைக்கப்பட்டிருக்கும்‌. தங்கள்‌ பள்ளிகளில்‌ அளவெடுத்த பணியாளர்கள்‌ வந்து இந்த சீருடைகளை மாணவ/ மாணவிகளுக்கு வழங்க உள்ளனர்‌.


குறிப்பிட்ட மாணவ/ மாணவிகளுக்கு சரியான அளவு உள்ள சீருடைகள்‌ வழங்கும்‌ பணியினை சமூக நலத்‌ துறைப்‌ பணியாளர்களுடன்‌ இணைந்து மேற்கொள்ள அனைத்துப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கும்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்குமாறு மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌/ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கு‌ (தொடக்கக்‌ கல்வி) அறிவுறுத்தப்பட்டு உள்ளது.’’


இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.