2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி அளவில் பயிற்சி
இதன் தொடர்ச்சியாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், தேர்வுகள் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட உள்ளன. பாடம் ஒன்றிற்கு 5 ஆசிரியர்கள் வீதம் 25 ஆசிரியர்கள் செயல்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி அளவில் நடைபெறும் 30 வார அலகுத் தேர்வுகள் மூலம் 1800 வினாக்களும், முழு ஆண்டு விடுமுறை நாட்களில் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் நடைபெறவிருக்கும் சிறப்பு வகுப்புகள் மூலம் 2200 வினாக்களும் ஆக மொத்தம் 4000 வினாக்கள் தயார் செய்யப்படும்
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவர்களில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமும், ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்படும்.
ஊக்கப்படுத்தலாம், கட்டாயப்படுத்தக் கூடாது
பெரும்பாலான மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியில்பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது. எந்த மாணவ மாணவியரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது.
தினசரி மாலையில் பயிற்சி
அனைத்து வேலை நாள்களிலும் பாடவாரியாக மாலை 4.00 மணி முதல் 5.15 மணி வரை போட்டித் தேர்வுகளுக்கு பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் கால அட்டவணைப்படி திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும். மேலும், அரசு மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
போட்டித் தேர்வுகளின் மதிப்பீட்டு அடிப்படையில் விடைத்தாள் மதிப்பீடு
போட்டித் தேர்வுகளின் மதிப்பீட்டு அடிப்படையில் (Negative marks) விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பெண்கள் எமிஸ் தளத்தில் பதிவிட வேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சி வழங்கப்படும் பாடத்தலைப்பினைப் பற்றிய சிறு அறிமுகம், அப்பாடப் பகுதியிலிருந்து போட்டித் தேர்வுகளுக்கு எதிர்நோக்கப்படும் வினாக்களைத் தீர்ப்பதற்கான சிறு குறிப்புகள், சூத்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான எளிய முறைகள் ஆகியன மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.