மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஒரு நாளில் மூன்று ஷிப்ட்களாக நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.  


அதன்படி, ஒரு நாளில் இரண்டு  கட்டங்களாக நடைபெறும் தேர்வு, இனி வரும் ஆண்டுகளில் மூன்று கட்டங்களில் (ஷிப்ட்களில்) நடத்தப்படும். தேர்வு நேரம் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை  ஜூலையிலும் வெளியிட யுஜிசி திட்டமிட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 


இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு இந்தாண்டு எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் இல்லாமல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்தாண்டு பொது நுழைவுத் தேர்வின் போது பல்வேறு தொழில்நுட்ப சிக்கலகளை மாணவர்கள் சந்தித்தனர். அதை கவனத்தில் கொண்டு, இந்தாண்டு முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென கூடுதலாக தேர்வு மையங்கள், கம்யூட்டர்கள் தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட் தேர்வு) மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று ஏற்கெனவே யுஜிசி தெரிவித்து இருந்தது. மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. 


பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜெ.இ.இ. மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுடன் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வை (CUET) ஒன்றாக இணைத்து நடத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த யு.ஜி.சி. தலைவர் “ மூன்று தேர்வுகளை ஒன்றிணைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி செய்யும்பட்சத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும்.’ என்று தெரிவித்தார்.  மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக கால அவகாசம் வழங்கப்படும்பட்சத்தில் முன்னதாகவே அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.




மேலும் வாசிக்க..


Madras University Result: சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது?- காத்துக்கிடக்கும் மாணவர்கள்


School Leave: புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறையா?- அமைச்சர் பதில்