மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 26) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.  


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.


தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில்  இந்தத் தேர்வு, ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 


இந்த நிலையில் இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலப்பு முறையில் நாளுக்கு 2 அல்லது 3 ஷிஃப்டுகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி அன்று வெளியாக உள்ளன.


இன்றே கடைசி


இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்.26ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (மார்ச் 26) இரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாடு முழுவதும் 13 மொழிகளில் 26 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 380 நகரங்களில் க்யூட் தேர்வு நடைபெற உள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


* என்டிஏவின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்துக்குச் செல்லவும்.


* அதாவது https://exams.nta.ac.in/CUET-UG/ என்னும் இணைப்பை க்ளிக் செய்யவும். அ


* அதில்,  CUET (UG) - 2024 Click Here for Registration/Login என்ற இணைப்பை சொடுக்கவும். அல்லது  https://cuetug.ntaonline.in/ என்ற இணைப்பைத் தெரிவு செய்யவும்.


* அதில், விண்ணப்ப எண், கடவுச் சொல், பாதுகாப்பு பின் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.


* தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள், கையெழுத்து ஆகியவற்றை உள்ளிடவும்.  


* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பித்ததை உறுதி செய்யவும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/