Israel Border: லெபனானில் இருந்து ஏவப்பட்ட டேங்கர் எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையைத் தாக்கியது.
இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் - இந்தியர் பலி:
இஸ்ரேல் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நேற்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்கலியோட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியது. இதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இவர்கள் மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் இஸ்ரேலின் வடக்கில் உள்ள கலிலி பகுதியில் உள்ள மோஷாவ் என்ற தோட்டத்தில் விழுந்து தாக்கியது” என மீட்பு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மேகன் டேவிட் அடோம் ஜாக்கி ஹெல்லர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர்கள் காயம்:
இந்த தாக்குதலில் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அவரது உடல் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
”முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதால் ஜார்ஜ் பெட்டா திக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உடல் நலம் தேறி, தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேசுவார்”என அதிகாரிகள் தெரிவித்தனர். மெல்வின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்:
காசா பகுதியில் நடந்து வரும் போருக்கு மத்தியில் ஹமாஸுக்கு ஆதரவாக அக்டோபர் 8 முதல் வடக்கு இஸ்ரேல் மீது தினமும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, லெபனானில் உள்ள ஷியா ஹிஸ்புல்லா பிரிவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் ஏழு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும், அவர்களது ஆம்புலன்ஸ்கள் மற்றும் இஸ்ரேலிய விமானப்படை ஹெலிகாப்டர்களில் பெய்லின்சன், ரம்பம் மற்றும் ஜிவ் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது.